தேசிய பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த சஜித் தலைமையில் என்னை அர்ப்பணிப்பேன்

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது போன்று சஜித் பிரேமதாசவின் தலைமையில் நாட்டின் தேசிய பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்று முன்னாள் இராணுவத் தளபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உறுதியளித்தார்.

காலிமுகத்திடலில் நேற்று முன்தினம் நடைபெற்ற சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய சரத் பொன்சேகா,

ஐக்கிய தேசியக் கட்சி ஒரு ஜனநாயகக் கட்சியாகும். அதுமட்டுமன்றி இந்த நாட்டின் பழம் பெரும் கட்சியென்பதும் குறிப்பிடத்தக்கது. வரலாற்று நெடுகிலும் இந்தக் கட்சி ஜனநாயக வழியிலேயே பயணித்து வந்ததை நன்றாக பார்க்க முடிகின்றது. ஒரு ஜனநாயகக் கட்சிக்குள் கருத்து முரண்பாடுகள் வருவது இயல்பு. அந்தக் கருத்து முரண்பாடுகளை பேச்சுவார்த்தை மூலமும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலமும் தீர்த்துக்கொள்ள முடியும். இன்று நாம் அனைவரும் ஒன்றுபட்டு சஜித் பிரேமதாசவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவுசெய்வதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம்.

சஜித் பிரேமதாச நாட்டின் எதிர்கால பாதுகாப்பை என்னிடம் ஒப்படைத்துள்ளார். அன்று யுத்தத்தை இன்னொரு தளபதிக்கு விட்டுச் செல்லமாட்டேன் என்று உறுதியளித்தேன். அதை சொன்னபடி நிறைவேற்றியிருக்கின்றேன். இன்று நான் சொல்கிறேன் சஜித் பிரேமதாச தலைமையில் நாட்டின் தேசிய பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். அவர் என்னிடம் ஒப்படைத்திருக்கும் இந்தப் பொறுப்பு, மிகவும் சவால் மிக்கதுதான். ஆனால், நிச்சயமாக அதை என்னால் நிறைவேற்ற முடியும். நாட்டின் இன்றைய நிலை மிகவும் கவலைக்கிடமானதாகவுள்ளது. இனவாதமும் போதைப்பொருள் பாவனையும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றது. இவற்றை இல்லாதொழிக்கும் பெரும் பொறுப்பை சஜித் பிரேமதாச என் தலையில் சுமத்தியுள்ளார். அந்தப் பொறுப்பை முழுமையாக நிறைவேற்றும் வரை நான் ஓயப்போவதில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

எம்.ஏ.எம். நிலாம்

 

Sat, 10/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை