முதல் டி20 இல் இலங்கைக்கு எதிராக அவுஸ்திரேலிய அணி சாதனை வெற்றி

டேவிட் வோர்னரின் அபார சதத்தின் மூலம் இலங்கைக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 134 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி ஒன்றை பெற்றது.

அடிலைட்டில் நேற்று நடந்த இந்தப் போட்டியில் தனது பிறந்த தினத்தில் களமிறங்கிய வோர்னர் ஆட்டமிழக்காது பெற்ற 100 ஓட்டங்கள் மூலம் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 233 ஓட்டங்களை விளாசியது.

இதன்போது வோர்னர் அணித்தலைவர் ஆரோன் பின்ச் மற்றும் கிளென் மெக்வெல்லுடன் சத இணைப்பாட்டங்களை பகிர்ந்து கொண்டார்.

எனினும் பதிலெடுத்தாடிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 99 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. சுழற்பந்து வீச்சாளர் அடம் சம்பா 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்தப் போட்டி முடிவானது டி20 போட்டிகளில் அவுஸ்திரேலியா பெற்ற மிகப் பெரிய வெற்றியாகவும் இலங்கையின் மிகப்பெரிய தோல்வியாகவும் இருந்து.

ஆஷஸ் தொடரில் சோபிக்காமலும், புதிய உள்ளுர் பருவத்தில் குறைந்த ஓட்டங்களை பெற்ற நிலையிலுமே வோர்னர் 56 பந்துகளில் 10 பெளண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 100 ஓட்டங்களை பெற்றார். வோர்னர் நேற்று தனது 33 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் ஆரம்ப வீரராக வந்த பின்ச் 36 பந்துகளில் 64 ஓட்டங்களை விளாசியதோடு மெக்ஸ்வெல் வெறுமனே 28 பந்துகளில் 7 பெளண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 62 ஓட்டங்களை பெற்றார்.

கசுன் ராஜித்த தனது நான்கு ஓவர்களிலும் விக்கெட் இன்றி 75 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தது டி20 போட்டிகளில் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாக சாதனை படைத்தது.

பதிலெடுத்தாட வந்த இலங்கை அணியின் குசல் மெண்டிஸ் முதல் ஓவரில் டக் அவுட் ஆன நிலையில் பட் கம்மின்ஸின் பந்தில் தனுஷ்க குணதிலக்க (11) மற்றும் பானுக்க ராஜபக்ஷ (2) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தசுன் சானக்க பெற்ற 17 ஓட்டங்களுமே இலங்கை அணி சார்பில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாக இருந்தது.

இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் அவுஸ்திரேலியா 1–0 என முன்னிலை பெற்ற நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி வரும் புதன்கிழமை பிரிஸ்பானில் நடைபெறவுள்ளது.

Mon, 10/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை