2023 ஆண்டு முதல் கூடுதலாக தொடர்களை நடத்த ஐ.சி.சி. முடிவு

எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு உலகக் கிண்ண தொடருக்கு பின்பதாக கூடுதலான தொடர்களை நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் (ஐ.சி.சி.) திட்டமிட்டுள்ளது.

தமது வருமானம் பாதிக்கும் என ஐ.சி.சி. இன் முடிவுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

துபாயில் ஆறு நாட்கள் இடம்பெற்ற ஐ.சி.சி. இன் ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

குறிப்பாக 2023 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடர் முடிந்த பிறகு அடுத்த 8 ஆண்டுகளுக்கு (2031 ஆம் ஆண்டு வரை) வருங்கால போட்டி அட்டவணை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. முடிவில் கூடுதலாக ஐ.சி.சி. தொடர்களை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

இந்த முடிவுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் மற்ற நாட்டு நிர்வாகிகள் முழுமையாக ஆதரவு அளித்துள்ளனர்.

இதன்படி மேற்கண்ட 8 ஆண்டு காலக்கட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஐ.சி.சி. தொடர் நடைபெறும். இரண்டு ’50 ஓவர்’ உலகக்கிண்ணம், நான்கு ‘ருவென்டி 20’ உலகக்கிண்ணம், இவற்றுடன் கூடுதலாக மேலும் இரு ஐ.சி.சி. தொடர்களை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு தொடரும் ’50 ஓவர்’ அடிப்படையில் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. முன்னணி 6 அணிகள் பங்கேற்கும் வகையில் மினி ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியாக இது இருக்கலாம் என்று தெரிகிறது.

உலக அளவிலான போட்டியை நடத்தும் போது தொலைக்காட்சி உரிமம் மூலம் ஐ.சி.சி.க்கு பெரும் வருவாய் கிடைக்கும். அதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை பகிர்ந்து தான் பெற முடியும். ஆனால் இரு நாட்டு தொடர் என்றால் பி.சி.சி.ஐ.க்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்.

இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் ராகுல் ஜோரி ஐ.சி.சி.க்கு அனுப்பிய கடிதத்தில், ‘ஐ.சி.சி.யின் முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. பி.சி.சி.ஐ. இரு நாட்டு தொடர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அது மட்டுமின்றி மற்ற நாடுகளிடம் ஏற்கனவே அளித்த உத்தரவாதத்தை கிரிக்கெட் சபை காப்பாற்ற விரும்புகிறது.

ஐ.சி.சி. போட்டிகளை அதிகப்படுத்துவதால் அது இரு நாட்டு தொடர்களை நிச்சயம் பாதிக்கும். எனவே இது குறித்து ஆலோசிக்க வேண்டும். தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நிர்வாகிகள் தேர்வு இடம்பெறுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் புதிய தலைவரே இறுதி முடிவை எடுப்பார்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் புதிய தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றதும் ஐ.சி.சி.யின் புதிய போட்டி அட்டவணை குறித்து உடனடியாக முடிவு செய்ய வேண்டி இருக்கும். இந்த சிக்கலை அவர் எப்படி சாதூர்யமாக கையாளப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Thu, 10/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை