ஐக்கிய அரசாங்கம் ஒன்றை அமைக்க நெதன்யாகு எதிர்க்கட்சிக்கு அழைப்பு

இஸ்ரேலில் இந்த ஆண்டு இடம்பெற்ற இரண்டாவது பொதுத் தேர்தலிலும் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதால், ஐக்கிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தனது மையவாத போட்டியாளரான பென்னி காட்ஸுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில் இரு கட்சிகளும் பெரும்பான்மை கூட்டணி ஒன்றை அமைக்க போதுமான வாக்குகளை பெறவில்லை என்று உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“தேர்தல் நேரத்தில் வலதுசாரி அரசு அமைக்க வேண்டும் என்று பேசினேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக தேர்தல் முடிவுகள் அவ்வாறு அமைவதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. வலதுசாரியால் கூட்டணி ஆட்சி அமைக்க முடியாது. ஆதலால் மிகப்பெரிய அளவில் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டி இருக்கிறது.

அதனால் எதிர்க்கட்சித் தலைவர் பென்னி கான்ட்ஸை விரைவில் சந்திக்கப் போகிறேன். அவருடன் பேசி கூட்டணி ஆட்சிக்கு முயற்சிப்பேன். இந்த மக்கள் எங்கள் இருவரையும் எதிர்பார்க்கின்றனர், ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றுவோம். இன்றே காட்ஸை சந்திப்பேன், எந்த நேரத்திலும் எந்த சந்தர்ப்பத்திலும் சந்திப்பேன். உடனடியாக கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பணிகளைத் ஆரம்பிப்பேன்” என்று நெதன்யாகு தெரிவித்தார்.

எனினும் பிரதமர் அழைப்புக் குழுத்து காட்ஸின் கட்சி ஒரு கண்டிப்பான நிலைப்பாட்டிலேயே இருப்பதாக கருதப்படுகிறது.

ஊழல் குற்றச்சாட்டுக்கு முகம்கொடுத்திருக்கும் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி அரசொன்றில் பங்கு வகிப்பதை அவர் முன்னதாக நிராகரித்திருந்தார்.

எனினும் பிரதமரின் இந்த அழைப்பை ஜனாதிபதி ரயுவன் ரிவ்லின் நேற்று ஜெரூசலத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது வரவேற்றார்.

இந்நிலையில் அரசோன்றை அமைப்பதற்கு அதிக வாய்ப்புக் கொண்டவருக்கு அதற்கான பரிந்துரையை வழங்குவதற்கு முன்னர் ஜனாதிபதி கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.

இந்தத் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகளை வெளியிடுவதில் மத்திய தேர்தல் குழு மந்தமான போக்கை காட்டுகின்ற நிலையில் நேற்று வரை 68.1 வீதமான வாக்குகள் வரையே எண்ணப்பட்டிருந்தன.

காட்சின் நீலம் மற்றும் வெள்ளை கட்சி, நெதன்யாகுவின் வலதுசாரி கட்சியை விடவும் 0.78 வீத வாக்குகளால் முன்னிலையில் இருந்தது. அரபு கட்சிகளின் கூட்டணி மூன்றாவது இடத்தில் உள்ளது. தீவிர பழமைவாத ஷாஸ் கட்சி நான்காவது இடத்திலும் யிஸ்ராயில் பெயிட்னு கட்சி ஐந்தாவது இடத்தில் உள்ளது.

எனினும் இது எவ்வாறு 120 இடங்கள் கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்தில் பகிரப்படும் என்பதை தேர்தல் குழு குறிப்பிடாதபோதும் லிகுட் கட்சியை விடவும் இரண்டு ஆசனங்கள் மேலதிகமாக நீலம் மற்றும் வெள்ளை கட்சி 33 ஆசனங்களை வெல்லும் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

காட்சின் தலைமையை கொண்ட மைய இடதுசாரி முகாம் 57 இடங்களையும் நெதன்யாகுவின் வலது சாரி மற்றும் மதக்கட்சிகளை சேர்ந்த கூட்டணி 55 இடங்களையும் பாராளுமன்றத்தில் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த இரண்டு தரப்புகளில் ஒன்று பாராளுமன்றத்தில் தேவைப்படும் பெரும்பான்மையான 61 ஆசனங்களை பெற அவிக்டர் லிபர்மன் தலைமையிலான யிஸ்ராயில் பெயிட்னு கட்சியின் ஆதரவை பெற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளன. எனினும் அவர் பரந்த மிதவாத ஐக்கிய அரசு ஒன்றை அமைப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இஸ்ரேலின் கட்டயான இராணுவ சேவையில் தீவிர பழைமைவாத ஆடவர்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து மதக் கட்சிகளுடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து லிபர்மன் நெதன்யாகுவின் கூட்டணி அரசில் இருந்து விலகியதை அடுத்தே கடந்த ஏப்ரலில் இஸ்ரேல் பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டி ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Fri, 09/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை