ரயில்வே ஊழியர்களின் ​சட்டப்படி வேலை போராட்டத்தால் பயணிகள் அசெளகரியம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே ஊழியர்கள் முன்னெடுத்துவரும் சட்டப்படி வேலை போராட்டம் காரணமாக ரயில் சேவை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், பயணிகள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்தனர். 

ரயில்வே தொழிற்சங்கங்கள் நேற்றுமுன்தினம் தொடக்கம் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. 

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள், சாரதிகள், நிலைய கட்டுப்பாட்டளர்கள் மற்றும் ரயில் பரிசோதனை முகாமையாளர்கள் உள்ளிட்டவர்களே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ரயில் விபத்துக்களின் போது ஏற்படக்கூடிய நட்டத்தை ரயில் சாரதிகள் மற்றும் ஊழியர்களிடம் அறவிடுவதற்கு மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவ்வாறு ரயில்வே தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

நாடாளாவிய ரீதியில் பல்வேறு பிரதேசங்களிலும் இதனால் பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். புகையிர சேவைகளில் தாமதம் ஏற்படுவதால் பாடசாலை மாணவர்கள் முதல் தொழிலுக்குச் செல்ல வேண்டியவர்களென அனைவரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 

போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்ட  இயந்திர தொழில்நுட்பவியளாளர்கள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட,

அரசாங்கம் எமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வை வழங்கினால் போராட்டத்தை கைவிட நாம் தயாராகவுள்ளோம் என்றார். 

இதேவேளை, கொழும்பு கோட்டை – மருதானை மற்றும் தெமட்டகொடைக்கு இடையில் ரயில் சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த கோளாறு காரணமாக கொழும்பு மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கு புகையிரதங்கள் வருகைத் தருவதிலும், இயக்குவதற்கும் தடை ஏற்பட்டது.

சுப்பிரமணியம் நிஷாந்தன் 

 

Sat, 09/21/2019 - 08:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை