மன்னாரில் வீடமைப்பு திட்ட நிதி வழங்குவதில் இழுத்தடிப்பு

3,285 பயனாளிகள் பாதிப்பு

சபையில் சுட்டிக்காட்டி டக்ளஸ் கேள்வி

மன்னார் மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் அமைக்கப்பட்டுவரும் 3,285வீடுகளுக்குரிய நிதியை தேசிய வீடமைப்பு அதிகார சபை இழுத்தடிப்பு செய்வதால் விரைவாக அதனைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவை கேட்டுக்கொண்டார்.  குறிப்பிட்ட நிதி, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மூலமாக எப்போது விடுவிக்கப்படும்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.  

பாராளுமன்றத்தில் நேற்று 27/2நியதிச் சட்டத்தின் கீழான கேள்வி நேரத்தின் போது வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் இவ்வாறு கேள்வி எழுப்பிய அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

மன்னார் மாவட்டத்தில் மன்னார், நானாட்டான், முசலி , மாந்தை மேற்கு ஆகிய நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் 139மாதிரிக் கிராமங்களுக்கென 3,285வீடுகள் தலா 7இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபா வீதம் கட்டம் கட்டமாக நிர்மாணப் பணிகள் மேற்கொள்கின்றன.  

தேசிய வீடமைப்பு அதிகார சபை இதை வழங்குவதற்கான ஏற்பாட்டுடன் இந்த நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இருந்தும், வறுமை நிலையில் வாழ்ந்து வருகின்ற மேற்படி பயனாளிகளில் பெரும்பாலோனோர் நுண் கடன் போன்ற கடன் திட்டங்கள் மூலமாக கடன்களைப் பெற்றுக் குறிப்பிட்டளவு வரையில் கட்டடங்களை அமைத்தும், தேசிய வீடமைப்பு அதிகார சபையானது அதற்கான நிதியை விடுவிக்காமையினால் மேற்படி வீடுகளைப் பூர்த்தி செய்ய முடியாதிருப்பதாகவும் டக்ளஸ் தேவானந்தா எம். பி சுட்டிக்காட்டினார். 

இவ் வீடுகளை அமைப்பதற்காக இப் பயனாளிகள் ஏற்கனவே குடியிருந்த குடிசை வீடுகளையும் அகற்றியுள்ளதால் மழைக் காலம் ஆரம்பமாகும் நிலையில், பூர்த்தி செய்யப்படாத வீடுகளில் பெரும் அசௌகரியங்களுடனேயே வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது மேலும், வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரை இத்தகைய பிரச்சினைகள் பெரும்பாலும்நிலவி வருகின்றன. 

இந்த நிலையில் மேற்படி நிதியை விடுவிப்பதற்கு ஏதேனும் தடைகள் உண்டா? வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இத்தகைய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு மக்களை இனங்கண்டு, அவர்களுக்கும் சாதகமானதொரு தீர்வினை விரைவில் வழங்க முடியுமா? என டக்ளஸ் தேவானந்தா எம்.பி.கேள்வி எழுப்பினார் 

மேற்படி கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களையும் அவர் அமைச்சர் சஜித் பிரேமதாச விடம் கோரினார். 

எனினும் நேற்று அமைச்சர் சஜித் பிரேமதாச சபைக்கு வருகை தராதமையினால் பிறிதொரு தினத்தில் பதில் வழங்கப்படுமென ஆளும் கட்சி பிரதம கொறடா அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். 

லோரன்ஸ் செல்வநாயகம் 

Sat, 09/21/2019 - 09:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை