பஹாமாஸில் சூறாவளியால் பெரும் அழிவு

சக்திவாய்ந்த டொரியன் சூறாவளி பஹாமாஸில் கட்டுக்கடங்காத வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து பேரை பலிவாங்கிய சூறாவளியால் ஊரே வெள்ளக்காடாய் காட்சியளிப்பதோடு சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

வரலாற்றில் நாம் இதுவரையிலும் கண்டிராத வகையிலான சோதனையில் சிக்கியுள்ளோம் என்று அந்நாட்டுப் பிரதமர் ஹபெர்ட் மின்னிஸ் துயரத்துடன் கூறியுள்ளார்.

4ஆம் இலக்க சூறாவளி என வகைப்படுத்தப்பட்ட டொரியன் சூறாவளி, ஏராளமான வீடுகளின் கூரைகளைப் பெயர்த்துச்சென்றதோடு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களையும் வாரிச்சுருட்டிச் சென்றது. ஏறக்குறைய 2,000க்கும் மேற்பட்டோர் காப்பாற்றும்படி அழைப்பு விடுத்ததாக வானொலி நிலையம் ஒன்று தெரிவித்தது.

தெற்கு கரோலினா கடலோரப் பகுதியில் இருந்து 830,000 பேரை பாதுகாக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இந்த வாரம் முழுதும் கனமழையும், பலத்த காற்றும் வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிராண்ட் பஹாமா தீவில் உள்ள சர்வதேச விமான நிலையம் வெள்ளம் சூழ்ந்து கடல் போன்று காட்சியளிக்கிறது.

சுமார் 13,000 வீடுகள் சேதமடைந்துள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் மதிப்பிட்டுள்ளது.

குடி தண்ணீர்க் கிணறுகளில் உப்பு நீர் கலந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. எனவே அங்கு வெள்ள இடிபாடுகளில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு குடிநீர் உடனடித் தேவையாகக் கருதப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக மின்சேவை துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியுள்ளது பஹாமஸ். மீட்புப் பணியில் உதவுவதற்காக அமெரிக்கா அங்கு நான்கு ஹெலிகொப்டர்களை அனுப்பி வைத்துள்ளது.

டொரியன் சூறாவளி அடுத்த 24 மணி நேரங்களில் புளோரிடாவின் கிழக்குக் கடலோரப் பகுதியைக் கடந்துசெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அப்பகுதிகளில் வாழும் ஏறக்குறைய 25 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவர் என்று கூறப்படுகிறது.

Thu, 09/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை