சு.க களமிறங்கினால் ஜனாதிபதியே வேட்பாளர்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதாக இருந்தால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மாத்திரம்தான் நிறுத்துவோம். குமார வெல்கமவை நிறுத்த எந்தத் திட்டமும் கிடையாதென சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன மட்டுமன்றி சு.கவுடன் இணைந்து போட்டியிட பல மாற்று சக்திகள் உள்ளதாகக் கூறிய அவர், பொது ஜன பெரமுனவினர் எம் மீது அதீத நம்பிக்கை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

எதிர்வரும் ஜனாதிபதி ​தேர்தலில் சு.க சார்பில் போட்டியிடத் தயார் எனக் குமார வெல்கம கூறியிருப்பது தொடர்பில் இங்கு வினவப்பட்டது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது,

குமார வெல்கம சு.கவில் இருந்து பொது ஜன பெரமுனவுடன் இணைந்து மஹிந்த ராஜபக்‌ஷவின் காலில் விழுந்திருந்தார். அந்த நிலையிலே அவர் கோட்டாபயவையும் விமர்சித்து வந்தார். தற்பொழுது சு.கவிடம் அவர் சேர்ந்துள்ளார். அவரை சு.க வேட்பாளராக நிறுத்த எந்த திட்டமும் கிடையாது. மத்திய குழுவும் செயற்குழுவுமே இது தொடர்பில் முடிவு செய்யும். சு.க வேட்பாளர் சார்பில் ஒருவரை நிறுத்துவதாக இருந்தால் ஜனாதிபதியே போட்டியிடுவார்.

பொதுஜன பெரமுனவுடன் பேசி வருகிறோம். அவர்கள் எம் மீது அதீத நம்பிக்கையில் உள்ளனர். எமக்கு எந்த நிபந்தனையும் இன்றி அவர்களுடன் இணைய முடியாது. சின்னம் தொடர்பில்தான் நிபந்தனை விதித்துள்ளோம்.

வேறு பதவிகள் எதுவும் கோரவில்லை.எவ்வித நிபந்தனையும் இன்றி அவர்களுடன் இணைந்தால் கட்சி கரைந்துவிடும். அமைச்சுப் பதவிகளுக்கும் எம்.பியாக மீண்டும் தெரிவாவதற்கும் மாத்திரம் அவர்களுடன் இணைய முடியாது.கட்சியை பாதுகாத்து, கட்சியின் தனித்துவத்தை பேணியே முடிவு எடுக்க வேண்டும்.

நாம் ஜே.வி.பியுடனும் பேசத் தயாராக இருக்கிறோம். அவர்கள் கூட்டணியாக போட்டியிடுகின்றனர். முன்னாள் இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்கவும் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.

பாராளுமன்ற தேர்தலில் சகல கூட்டணிகளும் எமக்கு முக்கியமாகும். பொது ஜன பெரமுன மட்டுமன்றி எமக்கு பல மாற்று வழிகள் இருக்கின்றன என்றார்.

கோட்டாபய ராஜபக்‌ஷ போட்டியிடுவது தொடர்பில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவரின் அடையாள அட்டை குறித்து சர்ச்சை எழுந்துள்ளதாகவும் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அந்தச் சிக்கலை அவரே தீர்க்க வேண்டும்.

19ஆவது திருத்தத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டாலும், 1988 ஆம் ஆண்டு தேர்தல் சட்டம் மாற்றப்படவில்லை. இந்த நிலையில் சில குழப்பங்கள் உள்ளன என்றார்.

ஷம்ஸ் பாஹிம்

Wed, 09/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை