ஞானசாரரை கைது செய்ய சபையில் வலியுறுத்துவேன்

செம்மலை நீதிமன்ற அவமதிப்பு;

நீதிமன்ற உத்தரவை மீறியும், முல்லைத்தீவு மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில்,தேரரின் பூதவுடலை கோயில் வளாகத்தில் எரித்தமை தவறான விடயமாகும். இதனைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என். டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

உயிரிழந்த தேரரின் பூதவுடலை, முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் தகனம் செய்வதற்காக தென்னிலங்கை தேரர்கள் மற்றும் ஞானசார தேரர் முனைந்ததும், நீதிமன்ற தீர்ப்பை மீறி தேரரின் பூதவுடலை தகனம் செய்தமை மிகவும் தவறான ஒரு விடயமாகும். முல்லைத்தீவு மக்களின் உணர்வுகளைப் புண்படுத்த கூடிய வகையில் செயற்பட்டதும் தவறான விடயமாகும். ஆகையினால், இவ்வாறான விடயங்களை வன்மையாக கண்டிப்பதுடன், நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வின் போது, தேரரின் பூதவுடல் எரிக்கப்பட்டமை தொடர்பாக கேள்வியெழுப்ப உள்ளேன் என்றார்.

அத்துடன், முல்லைத்தீவு சம்பவத்தின் பின்னர், ஞானசார தேரரை கைதுசெய்யுமாறு முல்லைத்தீவு மக்கள் வலியுறுத்துகின்றனர். அவரை கைதுசெய்ய பாராளுமன்றத்தில் வலியுறுத்துவீர்களா? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளிக்கையில், பத்திரிகைகளுக்காக கதைப்பதென்பது ஒன்று உள்ளது. அதனையே தமிழ் பிரதிநிதிகள் அங்கு செய்கின்றனர். ஆனால், எமது செயற்பாடு, நாங்கள் எதை முன்வைக்கின்றோமோ எதைப் பேசுகின்றோமோ, அதை வெளிப்படுத்துவதும், அதற்கு நடவடிக்கை எடுப்பதுமே.

தொல்பொருள் திணைக்களம் சஜித் பிரேமதாசவிற்கு கீழே உள்ளது. ஏன் தமிழ் தேசிய கூட்டமைப்பினர், சஜித் பிரேமதாசவிற்கு அழுத்தங்களைக் கொடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை?

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் கோவில் பிரச்சினையும், தொல்பொருள் திணைக்களத்துடன் சம்பந்தப்பட்ட பிரச்சினையை நான்கரை வருடங்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதனைச் செய்தது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

 

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

Wed, 09/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை