எழுக தமிழ் எழுச்சி: தமிழரை ஏமாற்றுவோரை எச்சரிக்கும்

ஐனாதிபதி வேட்பாளர்களுக்கும், தொடர்சியாக தமிழ் மக்களை ஏமாற்றுவோருக்கும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணியூடாக,தௌிவான செய்தியை வழங்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

தமிழ்மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் (07) வவுனியாவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்:

தமிழ் மக்கள் பேரவை இரண்டு மாபெரும் மக்கள் பேரணியை நடாத்தியிருக்கிறது. தமிழ் மக்களுக்கு நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்பதை கருத்திற்கொண்டு பேரவை தயாரித்துள்ள தீர்வு வரைபு அரசாங்கத்திற்கும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவருக்கும் கையளிக்கப்பட்டுள்ளது.பேரவையால் உருவாக்கபட்ட தீர்வு வரைபை அடியொற்றி வட மாகாண சபை உறுப்பினர்களால் ஏகமனதாக மற்றொரு தீர்வுத் திட்டம் தயாரிக்கபட்டு அதுவும் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்ட விடயங்களை அடியொற்றியே இந்த தீர்வுத் திட்டங்கள் தயாரிக்கபட்டுள்ளன. தமிழ் மக்கள் சார்பில் பாராளுமன்றம் சென்றவர்கள், தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை நிறைவேற்றத் தவறி விட்டனர். பதிலாக நான்கரை வருடங்களும் அரசாங்கத்தையே பாதுகாத்துள்ளனர். தற்போது ஐனாதிபதி, பிரதமர் ஆகியோர் ஏமாற்றிவிட்டனர், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முதுகெலு ம்பு அவர்களுக்கு இல்லை எனக் கூறுகின்றனர். இதன் பின்னரும் யார்போட்டியிட்டாலும் ஐக்கிய தேசிய கட்சிக்கே வாக்களிக்கப்போவதாகக் கூறுகின்றனர்.ரணில்,சஜித் பற்றி இவர்களுக்குப் பிரச்சினையில்லை. ஐக்கிய தேசிய கட்சியைப் பாதுகாப்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நோக்கம். நபர்களை நம்பி இனிமேலும் வாக்களிக்க முடியாது. தமிழ் மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளான காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை,காணாமலாக்கப்பட்டோருக்கு நிரந்தரமான தீர்வை வழங்குதல்,வடகிழக்கில் தொல்பொருட் திணைக்களம் மற்றும் வனவள திணைக்களத்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைள் நிறுத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். ஐனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடுகளிலும் தெளிவு பெறவேண்டியுள்ளது.

எழுக தமிழ் பேரணியூடாகவே இவற்றைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கோவில்குளம் குறூப் நிருபர்

Mon, 09/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை