அக்கரைப்பற்று வைத்தியசாலையில் புதிய கழிவு முகாமைத்துவ திட்டம்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தினமும் ஒன்றுசேரும் கழிவுகளை முகாமைத்துவம் செய்து அதன் மூலமாக பாரியளவிலான நன்மைகள் கிட்டுவதாக வைத்தியசாலை சுகாதார பராமரிப்பு கழிவு முகாமைத்துவ பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.எம்.றெமன்ஸ் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இச் சுற்றாடல் நேய செயற்றிட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் பொருட்டு இப்பொறிமுறைகளை மக்கள் கண்டு களிக்கும் வகையில் பொதுமக்கள் தினமொன்று ஒதுக்கப்பட்டு மக்களின் பார்வைக்காக கடந்த வெள்ளிக்கிழமை(06) மாலை இச்செயன்முறை காட்சிப் படுத்தப்பட்டன.

இதன்போது சூரிய சக்தி மின் தொகுதி, சிறுநீரக சுத்திகரிப்பு நிலையம், மூலிகைத் தோட்டம், மாடித் தோட்டம், இலவச சுடுநீர் வழங்கும் தொகுதி, சேதன மரக்கறித் தோட்டம், உயிரியல் வாயு உற்பத்திக்கூடம், கழிவு முகாமைத்துவ களஞ்சியசாலை, கழிவு முகாமைத்துவ அலகு, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், சுத்திகரிக்கப்பட்ட கழிவுகளை மீள் பாவனைக்குட்படுத்தும் பொறிமுறைக்கூடம் போன்ற பல்வேறு செயற்றிட்டம் மக்களுக்கான விளங்கங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டன.

இவ்வைத்தியசாலையில் அனைத்து ஆளணியினரின் கூட்டுப் பொறுப்புடனான செயற்பாடுகளிற்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்கி செயற்படுவது இச்செயற்றிட்டத்தின் வெற்றிக்கு மூலகாரணம் எனலாம்.

பெருந்தொகையான கழிவுகள் தினமும் ஒன்று சேரும் இடங்களுள் வைத்தியசாலைகள் பிரதான இடத்தினைப் பிடிக்கின்றன. இக்கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்படாமலும், முகாமைத்துவம் செய்யப்படாமலும் போகுமிடத்து இதன்மூலம் பல்வேறு நோயாளிகள் உருவாவதற்கு வைத்தியசாலைகளே களம் அமைத்தும் விடுகின்றன. இந்நடைமுறையிலிருந்து மக்களையும் சுற்றுப் புறச் சூழலையும் பாதுகாக்கும் பொருட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் புதியதோர் கழிவு முகாமைத்துவ செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் கடந்த வருடம் வழங்கப்பட்ட ஜனாதிபதி சுற்றாடல் விருதின் போது இவ்வைத்தியசாலை வெண்கலப் பதக்கத்தினை பெற்றுள்ளமை இதற்கு சான்றாக அமைகின்றது.

வைத்தியசாலையில் தினமும் உருவாக்கப்படுகின்ற சுமார் 300 கிலோகிராம் கழிவுகளை மீளவும் மக்களுக்கும் சூழலுக்கும் பயன்பெறத் தக்க வகையில் மாற்றியமைக்கப்படுகிறது.

இங்கு ஒன்று சேரும் உணவுக் கழிவுகளில் இருந்து உயிர் வாயு தயாரிக்கும் செயற்றிட்டமொன்றும் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன.

அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்

Mon, 09/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை