அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டுள்ள மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலை

நோயாளர்களின் தேவைகளை நிறைவேற்ற முடியாத அவலம்

மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலை தற்போது கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள், பார்வையாளர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

வைத்தியசாலை நோயாளர்களை குணப்படுத்தவும், பாரமரிக்கவும் அமைக்கப்பட்ட போதிலும் தற்போது சுகாதாரமற்ற சூழல் காரணமாக நோயாளர்கள் மேலும் நோய்வாய்ப்படும் நிலை உருவாகியுள்ளது.

வைத்தியசாலையில் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வைத்தியசாலையில் பல உபகரணங்கள் பழுதடைந்த நிலையில் காணப்படுவதுடன், அவற்றை திருத்துவதற்கு வெளிநாட்டிலிருந்து புதிதாக உதிரி பாகங்கள் கொண்டு வரப்பட்ட போது இதுவரை திருத்தும் பணிகள் ஆரம்பிக்கவில்லை. இதனால் உதிரிபாகங்கள் மழையினால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அரசியல் தலைவர்கள் மற்றும் ஆளுநர் வைத்தியசாலையை பார்வையிட வந்த போதிலும் இதுவரை எவ்வித மாற்றமும் இடம்பெற்றதாகத் தெரிவியவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.

வைத்தியசாலையை சுற்றி புற்காடுகளாக மாறி வருவதால் காட்டு விலங்குகள் வரும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். தற்போது மஸ்கெலியா பிரதேச சபை உருவாகியுள்ளபோதிலும் பிரதேச சபை உறுப்பினர்களோ அல்லது அதிகாரிகளோ கண்டும் காணாமல் இருப்பது வருந்தத்தக்கது.

வைத்தியசாலையில் சகல வசதிகளும் இருக்கின்ற போதிலும் அதற்கான உபகரணங்களும் வைத்தியர்களும் இல்லாமை கவலைக்குரிய விடயமாகும். இப்பகுதி மக்களுக்கு மட்டுமன்றி சிவனொளிபாதமலை பருவகாலத்தில் வருகை தரும் யாத்திரிகளுக்கு அருகில் உள்ள ஒரே வைத்தியசாலை இது.

எனவே வைத்தியசாலையில் நிலவும் குறைகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகள் முன்வரவேண்டுமென மக்கள் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.

 

மஸ்கெலியா தினகரன் விஷேட நிருபர்

Tue, 09/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை