கட்சியைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் போராடவேண்டி இருக்கிறது

ஹரீஸ் எம்.பி

சமூகத்தின் பாதுகாப்பு, இருப்பு போன்றன தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எடுக்க வேண்டிய இத்தருணத்தில் கட்சியைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் போராட வேண்டிய மிகப்பெரிய பொறுப்பில் இருந்து கொண்டிருக்கின்றோமென முன்னாள் இராஜாங்க அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ் லெற்றர் நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற டொப் 10 துறைசார்ந்த சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு நேற்றுமுன்தினம் (01) இரவு அக்கரைப்பற்றில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிதிகளில் ஒருவராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.எல். றமீஸ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.இஸ்மாயில், முன்னாள் மாகாண சபை அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் உள்ளிட்ட அதிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

ஜனாதிபதித் தேர்தல் மிக விரைவில் அறிவிக்கப்படவுள்ள இந்நிலையில், சமூகத்தின் அடைவு, இலக்கு என்ன என்பது பற்றி எந்தத் தீர்மானங்களுக்கும், கருத்தாடல்களுக்கும் நாங்கள் இன்னும் வரமுடியாத ஒரு சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கின்றோம். ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நாட்டில் அனேகமான மக்கள் ஒருவர் பற்றி பேசிவரும் இச்சந்தர்ப்பத்தில் சம்மந்தன் ஐயா, சுமேந்திரனால் மக்கள் கூறுகின்ற விடயத்தை ஏன் கூற முடியாதென்று நாங்கள் சிந்திக்க வேண்டும். அவர்கள் ரணில் விக்கிரமசிங்கவையே வேட்பாளராக வருவதற்கு அழுத்தம் கொடுத்து வருதாக நான் அறிகின்றேன்.

இது அவர்களின் நீண்டகால நோக்கத்தை அடைவதற்கான அரசியல் சிந்தனையாகவே நாம் பார்க்க வேண்டும்.

எவரை அரசியலில் கொண்டுவந்து சமூகத்தின் நீண்ட அபிலாசைகளையும், மக்களுக்கான பிரச்சினைகளையும் தீர்த்துக்கொள் முடியுமோ அவரைக் கொண்டுவருவதற்கான முயற்சியின் அடிப்படையில்தான் தமிழ் அரசியல் தலைமைகள் சிந்தித்து செயற்பட்டு வருகின்றது. ஆனால் எங்களுக்குள் சமூகம் தொடர்பான எந்தவித அடைவு எண்ணங்களும் இல்லை.

2015யிலும் இதே வரலாற்றுத் தவறுகளை முஸ்லிம் சமூகம் விட்டது. அதே வரலாற்றுத் தவறின் சந்தியிலேயேதான் நாம் இன்னும் நின்றுகொண்டிருக்கின்றோம். இம்மாத இறுதிக்குள் தேர்தலுக்கான அறிவித்தலை தேர்தல் ஆணையாளர் அறிவிக்கவுள்ள நிலையில் இன்னும் எங்கள் சமூகத்திற்கான அடைவு இலக்கு என்ன என்பது பற்றி எந்தத் தீர்மானங்களும் கருத்தாடல்களும் இல்லை என்றார்.

அம்பாறை சுழற்சி நிருபர்

Tue, 09/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை