இஸ்ரேல் தேர்தல்: இரு பிரதான கட்சிகளும் நெருக்கமான போட்டி

ஆட்சி அமைப்பதில் மீண்டும் இழுபறி

இஸ்ரேலில் ஐந்து மாதங்களுக்குள் இடம்பெற்ற இரண்டாவது பொதுத் தேர்தலில் நெருக்கமான போட்டி நிலவுவதாக ஆரம்பக்கட்ட தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

தற்போதைய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவின் கட்சி மற்றும் அவரது பிரதான போட்டியாளரான பென்னி கான்ட் சரிசமமாக 32 ஆசனங்களை வென்றிருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆட்சி அமைப்பதற்க பிரதமர் ஒருவருக்கு பாராளுமன்றத்தில் 61 ஆசனங்கள் தேவைப்படுகின்றன. சிறு கட்சியான யிஸ்ராயேல் பெய்ட்னியு கட்சி ஆட்சி அமைப்பதில் தீர்க்கமான பங்கு வகிக்கவுள்ளது.

இஸ்ரேலின் நீண்ட காலம் பிரதமர் பதவியை வகித்தவர் என பதிவாகி இருக்கும் நெதன்யாகும் தனது ஐந்தாவது தவணைக்கு பதவி ஏற்பது குறித்து உறுதியாக உள்ளார்.

வலதுசாரி லிகுட் கட்சிக்கு தலைமை வகிக்கு நெதன்யாகு, தான் மீண்டும் பதவிக்கு வந்தால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள யூதக் குடியேற்றங்களை இஸ்ரேலுடன் இணைப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

மேற்குக் கரை, கிழக்கு ஜெரூசலம் மற்றும் காசாவை இணைத்த தனி நாடு ஒன்று பற்றி எதிர்பார்ப்புடன் உள்ள பலஸ்தீனர்கள் இந்த நகர்வு அமைதி முயற்சியை முழுமையாக இல்லாமல் செய்யும் என்று எச்சரித்துள்ளனர்.

மையவாத நீலம் மற்றும் வெள்ளை கட்சிக்கு தலைமை வகிக்கும் கான்ட், பலஸ்தீன பகுதிகளை இணைப்பது பற்றியோ அல்லது பலஸ்தீன தனி நாடு பற்றியோ தனது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தாதவராக உள்ளார்.

எனினும் நெதன்யாகுவை போன்று பிரிக்கப்படாத ஜெரூசலம் இஸ்ரேலின் தலைநகர் என்ற நிலைப்பாட்டில் உள்ளார். இந்நிலையில் ஆட்சி அமைப்பதற்கு தீர்க்கமான சக்தியாக மாறி இருக்கும் யிஸ்ராயேல் பெய்ட்னியு கட்சியின் தலைவர் அவிக்டோர் லிபர்மேன், லிகுட் கட்சி மற்றும் நீலம் மற்றும் வெள்ளை கட்சி இணைந்த அரசுக்கு தாம் ஆதரவு அளிப்பதாக நேற்று குறிப்பிட்டிருந்தார்.

எனினும் நெதன்யாகுவின் கூட்டணியுடன் இணைவதை நீலம் மற்றும் வெள்ளை கட்சி நிராகரித்தது.

இதில் இஸ்ரேல் அரபு கூட்டணி 120 இடங்கள் கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்தில் 12 ஆசனங்களை வென்றிருப்பதாக உத்தியோகபூர்வமற்ற முடிவுகள் கூறுகின்றன.

இந்நிலையில் ஒன்பது இடங்களை வென்றிருக்கும் யிஸ்ராயேல் பெய்ட்னியு இன்றி எந்த தரப்புக்கும் ஆட்சி அமைப்பது சாத்தியமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரலில் நடந்த தேர்தலுக்கு பின் கூட்டணி அரசொன்றை அமைப்பதில் தோல்வி அடைந்ததை அடுத்தே முன்கூட்டிய தேர்தலுக்கு பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு அழைப்பு விடுத்திருந்தார்.

முந்தைய தேர்தலில் 120 ஆசனங்கள் கொண்ட இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் லிகுட் மற்றும் நீலம் மற்றும் வெள்ளை கட்சிகள் தலா 35 இடங்களை கைப்பற்றின. எனினும் தமக்கு சிறிய வலதுசாரி மற்றும் மதவாதக் கட்சிகளின் ஆதரவு இருப்பதால் அந்தத் தேர்தலில் நெதன்யாகு வெற்றியை அறிவித்தார். எனினும் பல வாரங்கள் நீடித்த ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

Thu, 09/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை