எண்ணெய் நிலைகள் மீதான தாக்குதலுக்கு ஈரானின் தொடர்பு பற்றி ஆதாரங்களை வெளியிட சவூதி உறுதி

சவூதி அரேபியாவின் எண்ணெய் நிலைகள் மீதான தாக்குதல்களுக்கு ஈரான் தொடர்புபட்டிருப்பதற்கான ஆதாரங்களை காண்பிக்க முடியும் என்று சவூதி குறிப்பிட்டுள்ளது. இந்த தாக்குதல் ஈரானிடம் இருந்து வந்ததாக குறிப்பிடும் அமெரிக்கா, இது மத்திய கிழக்கில் அபாயகரமான நகர்வாக எச்சரித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உட்பட எண்ணெய் நிலைகள் மீது கடந்த செப்டெம்பர் 14 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலுக்கு தொடர்பட்டிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது. இந்தத் தாக்குதலால் சவூதியின் எண்ணெய் உற்பத்தியில் பாதி அளவு நிறுத்தப்பட்டது.

“பிராந்தியத்தில் மோதலை நாம் விரும்பவில்லை. யார் மோதலை தொடங்குகிறார்கள்? என்று ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரூஹானி கேள்வி எழுப்பியுள்ளார். யெமனில் இடம்பெறும் யுத்தத்திற்கு அமெரிக்கா மீது அவர் குற்றம்சாட்டினார்.

ஈரான் ஆதரவு பெற்ற யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றதோடு, ஆளில்லா விமானங்கள் மூலம் அரம்கோ எண்ணெய் தளங்களில் தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்டனர்.

இந்நிலையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ மற்றும் அமெரிக்க அதிகாரிகள் சவூதி அரேபியா விரைந்துள்ளனர். ஈரான் மற்றும் யெமன் மீதான தடைகளை கண்காணிக்கும் ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்களும் சவூதிக்கு புறப்பட்டுச் சென்றதாக சவூதியின் ஐ.நா தூதுவர் குறிப்பிட்டார்.

ஈரானே பொறுப்பு என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவைகளை வெளிப்படுத்தினால் அதற்கு பதில் நடவடிக்கை எடுக்க அமெரிக்கா மற்றும் சவூதிக்கு அழுத்தம் ஏற்படும் என்றும் குறிப்பிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தாம் போரை விரும்பவில்லை என்று தெரிவித்தார். இந்நிலையில் தீவிரவாத தாக்குதலில் ஈரானிய அரசு தொடர்புபட்ட ஆதாரங்கள் இருப்பதாக சவூதி குறிப்பிட்டுள்ளது. இது பற்றி அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றையும் சவூதி பாதுகாப்பு அமைச்சு நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தது. இந்த தாக்குதல் பற்றி ஆரம்ப விசாரணையில் இந்த தாக்குதல் யெமனில் இருந்து வரவில் என்று சவூதி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது.

இந்த தாக்குதலானது தென்மேற்கு ஈரானை பூர்வீகமாக கொண்டது என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார். முன்னர் நம்பப்பட்டதை விடவும் உச்ச நிலையில் சிக்கல் கொண்ட குரூஸ் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானங்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக மூன்று அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும், பாரசீக வளைகுடாவின் வடக்கு முனையிலிருந்தே இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளதாக ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி கூறி உள்ளார். யெமனில் இருந்து தாக்குதல் நடந்தால் அதை எதிர்கொள்ளத் தயாராக சவூதியின் வான் பாதுகாப்பு அமைப்புகள் தெற்கு திசையை நோக்கி நிலை நிறுத்தப்பட்டிருந்ததால், அவர்களால் இந்த ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளைத் தடுத்து நிறுத்த முடியாமல் போய்விட்டது என்றும் அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மதிப்பீடுகளுக்கு பயன்படுத்திய உளவு விபரங்களுக்கான ஆதாரங்கள் மற்றும் விளக்கங்களை அந்த அதிகாரிகள் வழங்கவில்லை.

உலக எண்ணெய் உற்பத்தியில் 5 வீதம் நிறுத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு ஈரான் பொறுப்பு என்ற அமெரிக்காவின் கூற்றுக்கு ஈரான் மற்றும் அமெரிக்காவின் சில கூட்டணி நாடுகளும் கேட்டுள்ளன.

சவூதி அரேபியாவில் அடுத்த மாத இறுதிக்குள் எண்ணெய் உற்பத்தி முழுமையாகச் சீர் செய்யப்படும் என்று அந்நாட்டின் எரிசக்தி அமைச்சர் அப்துல் அஸிஸ் கூறியுள்ளார். இந்த மாதமும், அடுத்த மாதமும் நாள்தோறும் சராசரியாக 9.9 மில்லியன் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி செய்ய முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த திங்களன்று ஒரு கட்டத்தில் 20 வீதமாக உயர்ந்த எண்ணெய் விலை சவூதி அரேபியா உறுதி அளித்ததை அடுத்து குறைந்தது.

Thu, 09/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை