உரிமைகள் மறுக்கப்பட்டதாலேயே போராடுவதற்குத் தள்ளப்பட்டோம்

வடக்கில் பொருளாதார நடவடிக்கைகள் அபிவிருத்தி அடைவது போல தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளும் நிறைவேற்றப்பட வேண்டும். வேடிக்கைக்காக நாங்கள் போருக்குச் செல்லவில்லை. எங்களுடைய அரசியல் உரிமைகள், பிறப்புரிமைகள் மறுக்கப்பட்டதன் காரணமாகவே போராடுவதற்குத் தாங்கள் தள்ளப்பட்டதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் சுட்டிக்காட்டினார்.

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா தேசிய கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம்ஆரம்பமானது. இந் நிகழ்வை

சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற போது அந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், புலமை, பெருமை, புதுமை என்ற தலைப்பில் மிகவும் பொருத்தமான முறையிலே இக் கண்காட்சி இங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது. இன்றைக்கும் பெருமையோடு வாழ நினைக்கிறோம் என்பதை வெளிப்படுத்தி இக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யுத்தத்திற்கு பின்னர் திரும்பவும் வடக்கு, கிழக்கு மீளெழுச்சி பெற வேண்டிய ஒரு சூழ்நிலையில் பத்து வருடங்கள் நிறைவாகிறது. இந் நிலையில் பொருளாதார மீளெழுச்சி ஒரு முக்கியமானதொன்று.என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா என்கின்ற இந்த வேலைத்திட்டம் வடக்கில் பலருக்கு பிரயோசனமான ஒன்றாகத் தெரிந்திருக்கவில்லை. ஏனென்றால் இதற்கென்று கொடுக்கப்படுகின்ற நிதி உதவிகள் வங்கிகளின் ஊடாக மக்களின் கைகளில் வந்து சேர்வது கஷ்டமாக இருந்தது.வங்கிகளிடத்திலே செல்கின்ற போது பலவிதமான ஆதாரங்களையும் ஆவணங்களையும் அவர்கள் கேட்கின்ற காரணத்தினாலே ஒரு வகையில் இது தடைப்பட்டதாகவும் மக்கள் இதனாலே எங்களுக்கு உண்மையிலேயே பிரயோசனம் இல்லை என்று சொல்கிற அளவிற்கும் வந்திருக்கிறது.

இப் பின்னணியிலேயே தான் இந்த நான்கு நாள் கண்காட்சி இங்கே ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது.எனவே இக் கண்காட்சியின் மூலமாக நேரடியாக வங்கி உத்தியோகத்தர்களைச் சந்திப்பதன் மூலம் என்னென்ன முறைகளிலே உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிந்துகொள்ள முடியும்.யுத்தத்திற்குப் பிறகு நாங்கள் இந் நாட்டிலே தலைநிமிர்ந்து சக பிரஜைகளாக சம உரித்துடைய பிரஜைகளாக எங்களுக்குரிய தனியான உரிமைகளோடும் நாங்கள் வாழ்வதற்கேற்ற விதமாக எங்களுடைய அபிலாசையை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

 

யாழிலிருந்து ரி.விரூஷன்

Mon, 09/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை