நவம்பர் 17ம் திகதி ஐ.தே.மு அரசு மலரும்

மூவின மக்களும் எங்களுடன்;வெற்றிபெறுவது உறுதி

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐ.தே.முன்னணியுடன், நாட்டிலுள்ள தமிழர், சிங்களவர்கள் முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து இன மக்களும் இணைந்திருப்பதனால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.முன்னணி அமோக வெற்றி பெறுமென தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் கூறினார்.

அவரது அமைச்சினூடாக பல கோடி ரூபா செலவில் இரத்தினபுரி மாவட்ட தோட்டங்கள் மற்றும் இந்து ஆலயங்களில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணிகளை மக்களிடம் கையளித்தப் பின்னர், இரத்தினபுரி சிவன் கோயிலில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை

தெரிவித்தார்.

ஐ.தே.முன்னணி சார்பாக ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் இதுவரை நியமிக்காத நிலையில் எவ்வாறு அக்கட்சி வெற்றிபெறும் என்று கேட்கிறீர்கள். எமது ஐ.தே.முன்னணி சார்பில் யார் வேட்பாளராக போட்டியிட்டாலும் அவ்வேட்பாளர் நிச்சயம் வெற்றிபெறுவார்.

அது அமைச்சர் சஜித் பிரேமதாசவா? அல்லது பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவா? அல்லது சபாநாயகர் கரு ஜயசூரியவா? என்பது முக்கியமல்ல.எம்முடன் தமிழர்கள் ,சிங்களவர்கள் , முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து இன மக்களும் அனைத்து மதத்தினரும் இருப்பதானால் எமது முன்னணி வெற்றிபெறும்.

கடந்த கால அரசாங்கத்தில் தமிழ் மக்கள் வெள்ளை வானில் கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டனர். ஆனால் எமது அரசாங்கத்தில் 2015 ஆண்டுக்கு பின்னர் எந்தவொரு தமிழரும் வெள்ளை வானில் கடத்தப்படவுமில்லை. கொலை செய்யப்படவுமில்லை.

இதனால் வடக்கு மக்கள் மட்டுமல்ல கிழக்கு மக்களும் எம்முடன் இருப்பதனால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வரலாற்று வெற்றியைப்பெற முடியும்.

மேலும் வடக்கு மக்களுடன் தெற்கு மக்களும் கிழக்கு மக்களுடன் மேற்கு மக்களும் ஒன்றோடொன்று இலங்கையர் என்ற ரீதியில் இணைந்துள்ளனர். பெரும்பாலான நாட்டு மக்கள் இதனை விரும்புகின்றனர்.

நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்த கட்சி என்ற ரீதியில் எமது முன்னணியை தமிழ் ,சிங்களம் முஸ்லிம் மக்கள் அனைவரும் விரும்புகின்றனர்.

கடந்த ஆட்சியில்தான் சிறுபான்மையின மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தனர். தற்போது சற்று நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.

 

இரத்தினபுரி தினகரன் நிருபர்

Mon, 09/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை