ரஷ்ய ஆயுதக் கிடங்கில் வெடிப்பு: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள இராணுவத் தளத்தில் வெடிபொருள் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட மோசமான பாரிய வெடிப்புகளை அடுத்து அதனைச் சூழவுள்ள கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

அசின்ஸ்ன் நகருக்கு அருகில் இடம்பெற்ற இந்த வெடிப்பில் எட்டு இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இந்த ஆயுதக் கிடங்கில் ஆயிரக்கணக்கான பீரங்கி குண்டுகள் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. காலை தொடக்கம் இரவு வரை நெருப்புப் பந்துகள் மற்றும் கறும்புகைகள் வெளிவந்த வண்ணம் இருக்கும் வீடியோ கட்சிகள் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளன.

இதனையொட்டி கிராஸ்னொயார்ஸ்க் நகரின் மேற்குப் பகுதியில் அவசர நிலை ஒன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து சுமார் 3000 பேர் வரை அப்புறப்படுத்தப்பட்டதாகவும் மேலும் 11,000 குடியிருப்பாளர்கள் வரை வெளியேற தயாராக இருப்பதாகவும் டாஸ் செய்தி நிறுவனத்திற்கு அந்தப் பிராந்திய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வெடிப்புக்கான காரணம் உடன் தெரியவரவில்லை.

அசாதாரணமான சூடான வெப்பநிலை மற்றும் கடும் காற்று காரணமாக அண்மைய வாரங்களில் சைபீரியாவில் பரவிவரும் பாரிய காட்டுத் தீயில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்த பிராந்தியமும் ஒன்றாகும்.

Wed, 08/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை