சுஷ்மா சுவராஜ் மறைவு

தலைவர்கள் இரங்கல்;  டில்லியில் தகனம்

இந்திய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் (06) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மத்திய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜின் உடல் நேற்றுக்காலை

(07) டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மூத்த தலைவர்கள், மாநில முதல்வர்கள், அரசியல் பிரமுகர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து, பாஜக தலைமையகத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிறிது நேரம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு டெல்லி லோதி சாலையில் உள்ள மயானத்தில் தகனக்கிரியைகள் நடைபெற்றன. பாஜக மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், பியூஸ் கோயல் உள்ளிட்டோருடன், மாநில முதல்வர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகளும் தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா 1953ஆம் ஆண்டு ஹரியானாவில் பிறந்தார். அங்கேயே தனது பள்ளிப்படிப்பு, கல்லூரி படிப்புக்களை முடித்துவிட்டு, பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை நிறைவு செய்தார்.

1973ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார். இவர் இளம் வயதிலேயே (1977-82) ஹரியானா மாநில அமைச்சராக பதவி வகித்ததுடன் 7 முறை மக்களவை எம்.பியாகவும் இருந்துள்ளார்.

நமது நிருபர்

 

Thu, 08/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை