வளைகுடாவில் ஈராக் எண்ணெய் கப்பலை கைப்பற்றியது ஈரான்

வளைகுடா கடல் பகுதியில் மேலும் ஒரு வெளிநாட்டு எண்ணெய் கப்பலை ஈரான் பிடித்து வைத்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

ஏதோ ஒரு அரபு நாட்டிற்கு எரிபொருளை கடத்திச் சென்ற வெளிநாட்டு எண்ணெய் கப்பலை பாரசீக வளைகுடா பகுதியில் புரட்சிகர காவல்படையின் கப்பற்படை மடக்கி பிடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த எண்ணெய் கப்பலில் ஏழு லட்சம் லீற்றர் எரிபொருள் இருந்ததாகவும், அதில் இருந்த ஏழு மாலுமிகள் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனை பிடிப்பதற்கான முயற்சி கடந்த புதன்கிழமை எடுக்கப்பட்டதாக பார்ஸ் செய்தி முகமை கூறுகிறது.

மேலும், இந்தக் கப்பலில் இருந்த எரிபொருள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பிடிபட்ட இக்கப்பலில் எந்தக் கொடி இருந்தது, மாலுமிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

எனினும் ஈராக் நாட்டு வர்த்தகருக்குச் சொந்தமான சிறிய தனியார் கப்பல் ஒன்றே பிடிபட்டிருப்பதாக ஆரம்ப தகவல்கள் தெரியவருகிறது என்று ஈராக்கிய துறைமுக அதிகாரிகளை மேற்கோள் காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் கப்பலுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஈராக் எண்ணெய்த் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இது பற்றிய விபரங்களை சேகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம், அப்பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

ஈரானின் எண்ணெய் துறை மீதான தடைகளை அமெரிக்கா அதிகப்படுத்தியதால் ஏற்பட்டுள்ள பதற்றத்திற்கு இடையே இந்நிகழ்வு நடந்துள்ளது. 2015 அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதையடுத்து, ஈரான் மீதான தடைகள் மீண்டும் விதிக்கப்பட்டன.

எரிபொருளை கடத்தி செல்வதாக தற்போது இரண்டாவது முறையாக ஈரான் குற்றஞ்சாட்டுகிறது. கடந்த ஜூலை 13ஆம் திகதி பனாமாவின் எம்டி ரியா என்ற கப்பலை ஈரான் கடற்படையினர் பிடித்தனர்.

எரிபொருள் கடத்தலை தடுப்பதற்கான ரோந்து பணியில் கடற்படையினர் ஈடுபட்டிருந்தபோது அக்கப்பல் பிடிப்பட்டதாக புரட்சிகர காவல்படையினரின் செப்பா செய்தித்தளம் தெரிவித்தது.

கடந்த மாதம் ஹோர்முஸ் ஜலசந்தியில் பிரிட்டன் எண்ணெய் கப்பல் ஒன்றை ஈரான் பிடித்தது.

Tue, 08/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை