மனநோயுடன் தொடர்பு படுத்தும் டிரம்ப் மீது வலுக்கும் விமர்சனம்

அமெரிக்க துப்பாக்கிச் சூடு

அமெரிக்க டெக்சாஸ் மாநிலத்தில் 20 பேர் கொல்லப்பட்ட வணிக வளாகம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டை ஒரு உள்நாட்டு பயங்கரவாதமாகக் கருதி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க மற்றும் மெக்சிகோ எல்லையில் அமைந்திருக்கும் எல் பாசோ நகரில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் சம்பவ இடத்தில் இருந்து 21 வயது வெள்ளையின இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

டெக்சாஸில் ஹிஸ்பானியர்களின் ஆக்கிரமிப்புக்கு பதில் நடவடிக்கையாக இந்த தாக்குதலை நடத்தியதாக அந்த இளைஞன் இணையதளத்தில் வெளியிட்ட ஆவணம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த இளைஞன் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாக பொலிஸார் ஞாயிறன்று குறிப்பிட்டனர். இதன்மூலம் அவர் மரண தண்டனைக்கு முகம்கொடுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எல் பாசோ தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து 13 மணி நேரத்தில் ஒஹியோவில் இடம்பெற்ற மற்றொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் துப்பாக்கிதாரியின் சகோதரி உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டதோடு துப்பாக்கிதாரி பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவங்களை அடுத்து “துப்பாக்கிச் சூடுகளை தடுப்பதற்கு இன்னும் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது” என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

“வெறுப்புணர்வுக்கு எமது நாட்டில் இடமில்லை. அதனை நாம் பார்த்துக்கொள்வோம்” என்று ஞாயிறன்று டிரம்ப் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார். “இது ஆண்டாண்டு காலமாக நடக்கிறது. அதனை நாம் நிறுத்த வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

டிரம்ப் இந்த இரண்டு தாக்குதல் சம்பவங்களையும் மனநோய் பிரச்சினையுடன் தொடர்புபடுத்தியுள்ளார்.

“நடந்த இந்த இரு நிகழ்வுகளுக்கும் காரணம் மனநோய். இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர்கள் மிக மிக மோசமான மனநோய் கொண்டவர்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த இரு நிகழ்வுகளுக்கும் காரணம் குடியேறுபவர்கள் விடயத்தில் டிரம்ப் நடந்து கொள்ளும் முறையும் துப்பாக்கி கட்டுப்பாட்டை அவர் கொண்டுவர மறுப்பதும்தான் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் அமெரிக்காவில் நாடு முழுவதும் அடுத்த ஐந்து நாட்களுக்கு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட வேண்டும் என்று ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

Tue, 08/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை