ஹொங்கொங் ஆர்ப்பாட்டங்களால் போக்குவரத்து சேவைகள் முடக்கம்

ஹொங்கொங்கில் நேற்று நடத்தப்பட்ட வேலை நிறுத்தம் காரணமாக 209 விமானச் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. ஹொங்கொங் விமான நிலையத்துக்கான இருவழி விமானச் சேவைகளும் அதில் அடங்கும்.

இன்றைய தினத்திற்கான 10 விமானச் சேவைகளையும் ரத்து செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில் சேவைகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ரயில் கதவுகள் அடைப்பதைத் தடுக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் குடைகளைப் பயன்படுத்தி சேவைத் தாமதங்களை ஏற்படுத்தினர். மேலும் சிலர் ரயில் தடங்களில் எகுக் கம்பிகள், தள்ளுவண்டிகள், சைக்கிள்கள் போன்ற பொருட்களை வீசி எறிந்து ரயில் பயணங்களைத் தடுத்தனர்.

கடந்த பத்தாண்டுகளில் காணாத வகையில் ஹொங்கொங்கில் நிலைமை மோசமடைந்து வருகிறது.

பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பையும், முக்கியமான தொழிற்சாலைகளையும் முடக்கும் வகையில் நேற்றைய போராட்டம் அமைந்திருந்தது.

சந்தேக நபர்களைச் சீனாவுக்கு அனுப்பி விசாரிக்க வகை செய்யும் சர்ச்சைக்குரிய சட்டமூலம் தொடர்பில் ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. தொடர்ச்சியாக ஒன்பதாவது வாரமாகவும் அங்கு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

சீனாவுக்கு ஆதரவான அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக அது தற்போது மாறி வருகிறது. நகரத் தலைவராக கெர்ரி லாமை பதவி விலகும்படியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசமெழுப்புகின்றனர்.

20 தொழிற்சாலைகளைச் சேர்ந்த சுமார் 14,000 பேர் நேற்றைய போராட்டத்தில் பங்கேற்றனர்.

ஹொங்கொங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம் இந்த ஆர்ப்பாட்டங்களைக் கண்டித்துள்ளார். அத்துடன், தாம் பதவி விலகப் போவதில்லை என்று அவர் நேற்றுக் காலை நடந்த செய்தியாளர் கூட்டத்தின் முன்னிலையில் மீண்டும் கூறினார்.

“ஏழு மில்லியன் பேரின் நலன் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எங்களது பணியில் உறுதியுடன் நீடிக்கவேண்டிய பொறுப்பு என் கையிலும் எனது சகாக்களின் கையிலும் உள்ளது” என்றார் லாம்.

சட்டவிரோதமாக கூட்டம் போடுவது, ஆபத்தான ஆயுதங்களை வைத்திருப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் போலிசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை 34 பேரைக் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tue, 08/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை