இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர் அரசியலில் ஈடுபட முடியாது

இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர் அரசியலில் ஈடுபட முடியாது-Dual Citizen Can Registered as SL Voter-Mahinda Deshapriya

வேட்பு மனு தாக்கலின்போதே பரீட்சிக்கப்படும்

இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் இலங்கையில் வாக்காளராகப் பதியமுடியும். அதற்கு சட்டத்தில் இடமுண்டு. ஆனால், அவர்களால் இங்கு அரசியலிலீடுபட முடியாது எனத் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுத்தலைவர் மஹிந்த தேசப்பிரிய, இலங்கை பிரஜையாக இல்லாத எவரும் வாக்காளாராக பதியமுடியாது எனவும் குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுணவில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் கோத்தாபய ராஜபக்ஷ 2005இல் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது, இரகசியமாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொண்டமை, இரண்டு இலங்கை கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொண்டமை தொடர்பில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பாக வினவிய போதே மஹிந்த தேசப்பிரிய மேற்கண்டவாறு தினகரனுக்குத் தெரிவித்தார்.

அடையாள அட்டை, கடவுச்சீட்டுக்கள் பெற்றுக் கொண்டமை தொடர்பில் தன்னால் எதுவும் கூற முடியாது என்று தெரிவித்த அவர், வாக்குரிமை தொடர்பில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளும் போது உரிய கவனம் செலுத்தப்படும் என  மேலும் தெரிவித்தார்.

ஒரு கட்சி அவரை வேட்பாளராக அறிவித்திருக்கின்றது. இன்னமும் வேட்புமனுக்கள் கோரப்படவில்லை. ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டு அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்யும் போதுதான் அது பரிசீலிக்கப்படும். 

தேர்தல் சட்ட விதிகள் அங்கு மீறப்பட்டிருந்தால், வேட்புமனுவை நிராகரிக்க எமக்கு அதிகாரமிருக்கின்றது. ஆட்சேபனை தெரிவிக்கப்பட வேண்டுமென்பது கிடையாது.

2005 இல் கோத்தாபய ராஜபக்ஷ, வாக்காளர் பதிவேட்டில் பெயரைப் பதித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்காலப் பகுதியில் நான் உயர்பதவியில் இருக்கவில்லை. நான் தேர்தல் ஆணையாளராக 2013 இன் பின்னரே பதவியேற்றேன்.

மற்றொரு விடயம் இன்றிருப்பது போன்ற நவீன உத்திகள் எதுவும் அன்று பதிவின்போது கையாளப்படவில்லை. வெறுமனே அடையாள அட்டை மட்டும் போதுமானதாகவே இருந்தது. அது பதிவு செய்யப்பட்ட மாவட்டத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும். முறைப்பாடு விசாரிக்கப்பட்டு முடிவு வெளிவருவதற்கு முன்னர் எம்மால் எதுவும் கூற முடியாது. நாம் அவசரப்படவில்லை பொறுத்திருந்து பார்ப்போம் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மேலும் தெரிவித்தார்.

எம்.ஏ.எம். நிலாம்

Sun, 08/18/2019 - 11:43


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை