இலங்கை அணி பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க நீக்கம்

ஜெரோம் ஜயரத்ன இடைக்கால பயிற்சியாளர்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து சந்திக்க ஹதுருசிங்ஹ நீக்கப்பட்டு அவருக்கு பதில் இடைக்கால பயிற்சியாளராக ஜெரோம் ஜயரத்ன நியமிக்கப்பட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபை நிறைவேற்றுக் குழுவின் அவசரக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

ஹத்துருசிங்கவை நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து நீக்கும்படி விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இலங்கை கிரிக்கெட் சபைக்கு கடந்த திங்கட்கிமை உத்தரவிட்ட நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“ஹதுருசிங்கவை நியூசிலாந்து தொடரில் பயிற்சியாளராக பயன்படுத்த வேண்டாம் என்று இன்று (திங்கட்கிழமை) நான் உத்தவிட்டேன்” என்று ஹரீன் பெர்னாண்டோ செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

இதன்போது சந்திக்க ஹதுருசிங்கவின் ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும்படியும் இல்லையெனில் ஒப்பந்தத்தை ரத்துச் செய்யும்படியும் இலங்கை கிரிக்கெட் சபைக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர்கள் குறித்து விளையாட்டுத் துறை அமைச்சர் மற்றும் கிரிக்கெட் சபைக்கு இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. பயிற்சியாளர் குழாமை மாற்றும்படி ஹரீன் பெர்னாண்டோ முன்னதாக உத்தரவிட்டிருந்தார்.

எனினும் நியூசிலாந்து தொடர் முடியும் வரை ஹத்துருசிங்கவை தக்கவைத்துக் கொள்ள கிரிக்கெட் சபை விளையாட்டுத் துறை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

இந்த விடயத்தில் தொடர்ந்து அதிருப்தியை வெளியிட்டு வரும் ஹரீன் பெர்னாண்டோ, பயிற்சியாளர் விடயத்தில் உறுதியான நிலைப்பாடு ஒன்றை எடுப்பதற்கு வலியுறுத்தியுள்ளார்.

விளையாட்டு உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு விளையாட்டுத் துறை அமைச்சு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று விளையாட்டுத் துறை அமைச்சில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. அதில் கருத்து வெளியிட்ட ஹரீன் பெர்னாண்டோ,

“ஹதுருசிங்கவுக்கு 40 ஆயிரம் டொலர் சம்பளம் வழங்குவதாக இருந்தால் அதனை 25 ஆயிரம், 20 ஆயிரம் வரை குறைத்து வெற்றி பெறுவதற்கு ஏற்ப கொடுப்பனவு முறை ஒன்றை தயாரிப்பது சரியில்லையா என்றே நான் கேட்கிறேன்.

வீரர்களின் சம்பளத்தை அவ்வாறு கொடுப்பதாக இருந்தால் ஏன் பயிற்சியாளர்களுக்கு அவ்வாறு செய்ய முடியாது என்பது தான் எனது கோரிக்கையாக இருந்தது.

24 மணி நேரத்திற்குள் இதனை எவ்வாறு மேற்கொள்வது என்பது பற்றிய திட்டத்தை கூறுவதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்தது. ஆனால் அதனை இதுவரை கூறவில்லை.

தேவை என்றால் ஒப்பந்தம் பற்றி அவர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இல்லையெனில் அவர் நீதிமன்றத்திற்கு செல்வதாக இருந்தாலும் அதனை செய்ய வேண்டி இருக்கும்” என்று அவர் குறிப்பிட்டார்.

2018 ஜனவரி மாதம் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஹத்துருசிங்கவின் ஒப்பந்தம் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதமே முடிவடையவுள்ளது. விளையாட்டு அமைச்சரின் அறிவுறுத்தலின்படி அவரை பதவி விலகும்படி இலங்கை கிரிக்கெட் சபை வலியுறுத்தியபோதும் தொடர்ந்து அவர் அணியில் நீடிக்கும் நிலைப்பாட்டில் இருந்து வந்தார்.

“அனைவருக்கும் நாம் இலக்கு ஒன்றை கொடுக்க வேண்டும். அப்படி இலக்கொன்றை கொடுக்காமல் எனக்கு இன்னும் 18 மாதங்கள் உள்ளன. நீங்கள் இதே தொகையை எனக்குக் கொடுக்க வேண்டும் என்று கூறுவதென்றால் அது நியாயமா?

திறமையை வெளிப்படுத்தி இருந்தால் எவருக்கும் பேரம் பேச முடியும். இலங்கை உலகின் முதலாவது, இரண்டாவது தரத்தில் இருப்பதாக இருந்தால் நீடிப்பதற்கு இத்தனை தொகை தர வேண்டும் என்று கேட்கலாம்.

முன்னாள் கிரிக்கெட் நிறுவனம் தமக்கு தேவையான வகையில் ஒப்பந்தம் செய்து கொண்டால், அதனை அகற்றுவதற்கும் அவர்கள் தெரிந்திருக்க வேண்டும்” என்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனிடையே இலங்கை கிரிக்கெட் சபை புதிய பயிற்றுவிப்பாளர் ஒருவரை தொடர்ந்து தேடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதற்காக டீன் ஜோன்ஸ், கிரான்ட் பிளவர், டொம் மூடி, ரசல் டொமிங்கோ மற்றும் மிக்கி ஆர்தர் ஆகிய அனைத்து பெயர்களும் இலங்கை கிரிக்கெட் சபையால் ஆராயப்பட்டு வருவதாக நம்பகமான வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது.

“இலங்கை கிரிக்கெட் சபையுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தாம் இன்னும் தயாரில்லை என்று மஹேல ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். எனக்குத் தெரிந்தவரை, தற்போதைய நிலையில் இலங்கை கிரிக்கெட் சபை மூன்று–நான்கு பயிற்சியாளர்களிடம் பேசியுள்ளது. ஒரு பயிற்சியாளர் சுதந்திரமாக இருப்பதோடு எந்த நேரத்திலும் வரத் தயாராக இருந்தபோதும் சிறந்தவர்கள் ஏனைய கட்டுப்பாடுகள் காரணமாக மேலும் கால அவகாசங்கள் தேவைப்படுகின்றன.

அடுத்த ஒருசில வாரங்களில் புது மாற்றங்களை கொண்டுவர எம்மால் முடியுமாக இருக்கும் என்று நான் உறுதியாக உள்ளேன்” என்று விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ கடந்த வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு குறிப்பிட்டிருந்தார்.

மறுபுறம் உலகக் கிண்ண முடிவுக்குப் பின் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்ஸின் ஒப்பந்தத்தை நீடிக்காத நிலையில் மீண்டும் பங்களாதேஷ் பயிற்சியாளராக செல்வது குறித்து ஹதுருசிங்க அந்நாட்டு கிரிக்கெட் சபையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக நம்பகமான வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது.

Wed, 08/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை