கடந்த கால அனுபவங்களை கொண்டு தமிழ் மக்கள் முடிவெடுக்க வேண்டும்

எழுத்துமூலம் உறுதிமொழி தந்தால் அதனை நிறைவேற்றுவார்கள் என நினைப்பது முட்டாள்தனம்

தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்போம் என எழுத்து மூலமான உறுதிமொழியை தருபவர்களுக்கு ஆதரவு கொடுக்கலாம் என்ற வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என நினைப்பது முட்டாள்த்தனம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நாச்சிமார் வீதியில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற விவாதம் தேவை இல்லை. ஏனெனில் கடந்த காலங்களில் நடைபெற்ற அனுபவங்களை மையாக வைத்து தமிழ் மக்கள் தெளிவான முடிவெடுக்க வேண்டும்.

கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற வன்னிப் போரில் ஏராளமான மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.அந்த போரை முன்னின்று நடத்திய அப்போதைய இராணுவ தளபதியான சரத் பொன்சேகாவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கடந்த தேர்தலில் ஆதரவு வழங்கியமையை தமிழ் மக்கள் மறக்கவும் மாட்டார்கள்.மன்னிக்கவும் மாட்டார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சமஸ்டி தீர்வு தருவார் என கூட்டமைப்பினர் கூறித் திரிகின்றனர்.இதனை முட்டாள்தனம் என்பதா அல்லது என்னவென்று கூறுவது என்று தெரியவில்லை.

ஏனெனில் தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட போது பாராளுமன்றத்தில் அதனை தீயிட்டுக் கொளுத்தியவர்களே இவர்கள் தான். ரணிலின் நரித்தனம் இப்போது அரசியலுக்கு வந்துள்ள கூட்டமைப்பின் பேச்சாளருக்கு புரியாது.

நான் 40 வருடங்களுக்கு மேலாக அரசியலில் இருக்கின்றேன்.நான் அரசியலில் ஈடுபட்ட காலத்தில் சுமந்திரன் பிறந்தே இருக்கமாட்டார். நாம் ரணிலின் நரித்தனத்தை ஆரம்ப காலத்தில் இருந்தே அறிந்து வைத்திருக்கின்றோம் என்றார்.

 

பருத்தித்துறை விசேட நிருபர்

Mon, 08/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை