கொலையை விபத்தாக மாற்றி அறிக்ைக; மருத்துவ பேராசிரியர் மீது குற்றப்பத்திரம்

தாஜுதீன் கொலை விசாரணையில் புதிய திருப்பம்

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணை

ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் முதலாவது பிரேத பரிசோதனையை நடத்திய போது கிடைத்த சாட்சியங்களை மறைத்ததாக முன்னாள் கொழும்பு பிரதான சட்ட மருத்துவ அதிகாரியான பேராசிரியர் ஆனந்த சமரசேகர மீது கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்தது.

வாசிம் தாஜுதீனின் மரணம் தொடர்பாக சாட்சியங்களை காணாமற் போகச் செய்தமை அல்லது பிழையான தகவல் வழங்கியமை ஆகியவை தொடர்பாக தண்டனை சட்டக் கோவையின் 198 ஆம் பிரிவின் கீழ் முன்னாள் கொழும்பு பிரதான சட்ட மருத்துவ அதிகாரி மீது குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் 25 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் சந்தேக நபரை விடுதலை செய்யவும் மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா திலகரட்ன உத்தரவிட்டார்.

இதற்கிடையே தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றப்பத்திரம் மீதான ஆரம்ப ஆட்சேபனையை எழுப்புவதற்கு பிரதிவாதி எதிர்பார்த்திருப்பதாக அவரது சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரவீந்திர பெர்னாண்டோ நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதனையடுத்து பேராசிரியர் சமரசேகரவின் விரல் அடையாளங்களைப் பதிவு செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டதுடன் எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தது. அத்துடன் அடுத்த வழக்கு விசாரணையின் போது சந்தேக நபரின் ஆரம்ப ஆட்சேபனையை நீதிமன்றம் கேட்கவிருப்பதாகவும் தெரிவித்தது.

சந்தேக நபரான பேராசிரியர் சமரசேகர மீது சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரத்தில் வசிம் தாஜுதீனின் முதலாவது பிரேத பரிசோதனையை பிரதான சட்ட மருத்துவ அதிகாரியான சந்தேக நபரே மேற்கொள்ள வேண்டும் என்று பிரேத பரிசோதனை நடைமுறையில் கேட்கப்பட்டிருந்த போதிலும், தனக்குக் கீழ் பணிபுரியும் இரு கனிஷ்ட மருத்துவ அதிகாரிகளிடம் வசிம் தாஜுதீனின் ஆரம்ப பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு பேராசிரியர் சமரசேகர பணித்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.

அதேநேரம், தாஜுதீனின் முதலாவது பிரேத பரிசோதனையின் போது சந்தேக நபரான முன்னாள் பிரதான சட்ட மருத்துவ அதிகாரி பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டமை விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாகவும் குற்றப்பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் தாஜுதீனின் சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நடத்தும் போர்வையில் தாஜுதீனின் உடலின் பல உடற் பாகங்களை அகற்றுமாறு சந்தேக நபர் அறிவுறுத்தல் விடுத்ததற்கு போதிய சான்றுகள் இருப்பதாகவும் சட்ட மாஅதிபர் குற்றப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவ்வாறு அகற்றப்பட்ட உடற் பாகங்கள் மூலம் சந்தேக நபர் எந்தவொரு மேலதிக விசாரணையையும் மேற்கொள்ளவில்லை என்றும், சட்ட மருத்துவ அதிகாரிக்கான அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த உடற்பாகங்கள் காணாமற் போயுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன் தாஜுதீனின் முதலாவது பிரேத பரிசோதனை அறிக்கையை வெளியிட சந்தேக நபர் 2 வருட காலம் எடுத்துக் கொண்டதாகவும் சட்ட மா அதிபர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார். எவ்வாறெனினும், தாஜுதீனின் இரண்டாவது பிரேத பரிசோதனை மேற்கொண்ட சட்ட மருத்துவ அதிகாரிகள் குழுவினர் தாஜுதீனின் மரணம் விபத்தினால் ஏற்பட்டதல்ல, அது ஒரு கொலை என்று தெரியவந்துள்ளது.

மேற்படி விசாரணையை நடத்திய கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 2016 பெப்ரவரி 25ம் திகதி அதன் தீர்ப்பை வழங்கிய போது தாஜுதீனின் மரணம் ஒரு கொலை என்று தெரிய வருவதாகவும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறும் சி.ஐ.டி. பணிப்பாளருக்கு உத்தரவிட்டிருந்தது.

இது தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தாஜுதீனின் பற்கள் உடைக்கப்பட்டிருந்ததாகவும், இடுப்புப் பகுதியில் எலும்புகள் உடைக்கப்பட்டதுடன் இறப்பு ஏற்படும் முன் கழுத்தில் கூரிய ஆயுதமொன்றினால் குத்தித் துளைக்கப்பட்டிருப்பதாகவும், விபத்து நிகழ்வையடுத்து இவை மேற்கொள்ளப்பட்டதாகவும் சி.ஐ.டி. நீதிமன்றத்துக்கு வழங்கிய அதன் அறிக்கையில் கூறியுள்ளது.

அத்துடன் தாஜுதீனின் காலில் இருந்த தசைகள், உடைந்த கண்ணாடித் துண்டு ஒன்றினால் வெட்டப்பட்டிருந்ததாகவும் சி. ஐ. டி. அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருந்தது. அதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக முதலில் கிடைத்த தகவலின்படி, தாஜுதீன் விமான நிலையத்துக்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது அவரது கார் கட்டுப்பாட்டை மீறி நாரஹேன்பிட்டி பார்க் வீதியில் உள்ள சாலிகா மைதானத்தின் சுவரில் மோதி விபத்துக்குள்ளான சில வினாடிகளில் அவரது கார் வெடித்துச் சிதறியதாக பொலிஸார் கூறிவந்தமை குறிப்பிடத்தக்கது.

 

நமது நிருபர்

Wed, 08/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை