பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயரும்

பருத்தித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலையை மாவட்ட பொது வைத்தியசாலையாக விரைவில் தரமுயர்த்தப்படும் என சுகாதார அமைச்சர் டாக்கர் ராஜித சேனாரத்தன தெரிவித்தார்.

நோர்வே நாட்டின் 130 மில்லியன் ரூபா உதவி நிதியில் பருத்தித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள விபத்து அவசர சிசிக்சை பிரிவுக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,

மத்திய அரசு, மாகாண அரசு வைத்தியசாலைகள் என நான் பேதம் பாப்பதில்லை. நோயாளர்களுக்கு ஆரோக்கியமே தேவை. அதனையே நான் செய்கின்றேன். மூன்று வருடங்களுக்கு முன்னர் நோர்வே நாட்டுப் பிரதிநிதிகள் குழு ஒன்று என்னை சந்தித்து சுகாதார மேம்பாட்டுக்கு உதவுவதாக தெரிவித்தனர். இதற்கு முன்னதாக மூன்று மாதத்திற்கு ஒரு தடவை 9 மாகாணங்களின் சுகாதார அமைச்சர்களின் கூட்டத்தை கூட்டி வைத்தியசாலை குறைகளை கேட்டுக்கொள்வேன்.

இக் கூட்டங்களில் முன்னாள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், வடக்கு மாகாணம் 30 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு சுகாதார சேவைத் திட்டங்கள் தேவைப்படுகிறது என வலியுறுத்துவார். ஒரு முறை கூட்டம் முடிந்து அவர் ஊருக்கு போய் கொண்டிருந்தார். அந்த நேரம் தான் நான் நெதர்லாந்து குழுக்களுடன் பேசிக்கொண்டிருந்தேன்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடமாகாணத்துக்கு உதவ வேண்டும் என நான் தீர்மானித்து சத்தியலிங்கத்திற்கு அழைப்பு எடுத்தேன். அப்போது அவர் புத்தளத்தில் பயனித்துக் கொண்டிருந்தார். உங்கள் சுகாதார அபிவிருத்திக்கு நிதி வேண்டுமானால் உடனடியாக கொழும்பு வந்து என்னைச் சந்திக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் ஒப்புக்கொண்டு அன்றிரவு 10.30 மணிக்கு கொழும்பு வந்து எங்களை சந்தித்தார்.

அப்போது நெதர்லாந்தின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்காக 10 ஆயிரத்தது 632 மில்லியன் ரூபாவை நெதர்லாந்து நிறுவனம் வழங்கியது.

இந் நிதி உதவி மூலம் இலங்கையில் முதலாவது மாற்றுதிறனாளிகளுக்கு புனர்வாழ்வு சிகிச்சை பிரிவு மாங்குளம் வைத்தியசாலையிலும் பிரசவ விசேட சிகிச்சை நிலையம் கிளிநொச்சி வைத்தியசாலையிலும் பருத்தித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலையில் விபத்து அவசரப் பிரிவும் நிர்மாணிக்கப்பட்டதுடன் வைத்திய உபகரணங்களும் வழங்கப்பட்டன.

இவ் வைத்தியசாலையை மாவட்ட பொதுவைத்தியசாலையாக தரம் உயர்த்துமாறு அந்த நேரம் பாராளுமன்றத்தில் சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்தார். அப்போது சுகாதார அமைச்சராக நிமல் சிறிபால டிசில்வா இருந்தார். நான் எதிர்கட்சியில் இருந்தேன். சுமந்திரன் எம்.பியும் இக் கோரிக்கையை விடுத்தார். சுற்றுநிருபங்களில் சில சிக்கல்கள் இருக்கின்றன. அதனைத் திருத்தி மிக விரைவில் இவ் வைத்தியசாலையை மாவட்ட பொதுவைத்தியசாலையாக தரம் உயர்த்துவேன்.

நண்பர் சிவாஜிலிங்கம் வேகமானவர். மக்களுக்காக பாராளுமன்றத்தில் சண்டையும் பிடித்துள்ளார். சிவாஜி தனது வேகத்தை குறைத்து மீண்டும் பாராளுமன்றம் வர வேண்டும். அவர் சாதாரண மக்களின் பிரதிநிதியாக செயற்படுகிறார். வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் திறமை மிக்கவர். எதிர்காலத்தில் மாகாண முதலமைச்சராக வரவேண்டும். முதலமைச்சுடன் சுகாதார அமைச்சையும் தன் வசம் வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

கரவெட்டி தினகரன் நிருபர்

Mon, 08/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை