ரொஹிங்கியர்களை மியன்மார் அனுப்பும் முயற்சி தோல்வி

ரொஹிங்கிய அகதிகளை மியன்மாருக்கு திருப்பி அனுப்பும் மற்றொரு புதிய முயற்சி தோல்வி அடைந்துள்ளது. இதற்காக ஐந்து பஸ்கள் மற்றும் 10 டிரக்குகள் பங்களாதேஷினால் தயார்படுத்தப்பட்டபோதும் எவரும் அதில் செல்வதற்கு வரவில்லை.

“நாம் காலை 9 மணியில் இருந்து காத்திருந்தோம் எந்த அகதியும் திரும்பிச் செல்வதற்கு வரவில்லை” என்று தக்னாப் அகதி முகாமுக்கு பொறுப்பான பங்களாதேஷ் அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு நேற்று தெரிவித்தார்.

“இதுவரை யாரும் வரவில்லை” என்று அவர் நேற்று பிற்பகல் குறிப்பிட்டார்.

மின்மாரின் ரகினே மாநிலத்தில் இராணுவ நடவடிக்கையை அடுத்து 2017இல் சுமார் 740,000 முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட ரொஹிங்கிய அகதிகள் பங்களாதேஷுக்கு தப்பிச் சென்றனர். அவர்கள் ஏற்கனவே அங்கு தங்கி இருக்கும் 200,000 அகதிகளுடன் இணைந்தனர்.

ரொஹிங்கியர்களை மின்மார் தன் நாட்டு பிரஜைகளாக ஏற்பதில்லை என்றபோதும், அந்நாட்டின் ரகினே மாநிலத்தில் அந்த மக்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் பிரஜா உரிமையை மியன்மார் மறுத்து வருகிறது.

ரொஹிங்கியர்களை மியன்மாருக்கு திருப்பி அனுப்புவது தொடர்பில் கடந்த நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வி அடைந்த நிலையிலேயே இந்த புதிய முயற்சி இடம்பெற்றது. கடந்த மாதம் இந்த அகதிகள் இருக்கும் முகாமிற்கு மியன்மார் வெளியுறவு அமைச்சர் மியின்ட் துவின் தலைமையில் தூதுக் குழுவென்று விஜயம் மேற்கொண்ட நிலையிலேயே இந்த முயற்சி இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்காக ஆணையம் மற்றும் பங்களாதேஷ் அரசு இணைந்து மேற்கொண்ட நடவடிக்கை மூலம் சுமார் 3,500 ரொஹிங்கிய அகதிகள் மியன்மாருக்கு திரும்பிச் செல்ல தகுதி பெற்றனர்.

எனினும் இந்தப் பட்டியலில் இருப்பதவர்கள் நேற்று மியன்மார் திரும்ப முன்வரவில்லை என்பதோடு தமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு குடியுரிமை உத்தரவாதம் தேவை என்று வலியுறுத்தியுள்ளனர்.

Fri, 08/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை