திக்வெல்ல, லக்மால் இணைப்பாட்டம் : சரிவிலிருந்து மீண்டது இலங்கை அணி

அஜாஸ் படேலின் மிரட்டும் சுழற்பந்து வீச்சுக்கு முன்னால் இலங்கை அணி நியூசிலாந்துக்கு எதிராக தனது முதல் இன்னிங்ஸில் ஸ்திராமான ஓட்டங்களை எட்டியுள்ளது.

காலி சர்வதேச அரங்கில் நடைபெற்று வரும் போட்டியின் இரண்டாவது நாளான நேற்று தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணியின் ஆரம்ப வரிசையை படேல் தனது சுழலின் மூலம் சாய்த்தார். இதன்மூலம் அவர் ஐந்து விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

எனினும் இலங்கை அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவின்போது 227 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது. நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 249 ஓட்டங்களை பெற்ற நிலையில் இலங்கை 3 விக்கெட்டுகள் கைவசம் இருக்க 22 ஓட்டங்களாலேயே முதல் இன்னிங்ஸில் பின்தங்கியுள்ளது.

203 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் நியூசிலாந்து நேற்று தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்தபோதும் அந்த அணி மேலும் 46 ஓட்டங்களை பெறுவதற்குள் எஞ்சிய விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

86 ஓட்டங்களுடன் நேற்றைய நாளை ஆரம்பித்த ரொஸ் டெய்லர் மேலும் ஒரு ஓட்டத்தைக் கூட பெறாமல் சுரங்க லக்மாலின் பந்துக்கு ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணியின் ஆரம்ப வீரர்கள் திமுத் கருணாரத்ன மற்றும் லஹிரு திரிமான்ன இருவரும் டிரென்ட் போல்ட் மற்றும் டிம் செளதியின் வேகத்திற்கு முன் தனது விக்கெட்டை காத்து ஆடினர்.

எனினும் 11 ஆவது ஓவரில் பந்து வீச வந்த படேல் தனது முதல் ஓவரிலேயே திரிமான்னவை ஸ்டம்ப் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். இதே போன்ற ஒரு பந்தில் கருணாரத்தனவும் பட்டேலிடம் சிக்கி எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

இதனால் 66 ஓட்டங்களுக்கு இலங்கை அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஜோடி சேர்ந்த குசல் மெண்டிஸ் மற்றும் அஞ்சலோ மத்தியூஸ் 77 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில் தனது 10ஆவது அரைச் சதத்தை பெற்று அடுத்த பந்திலேயே மெண்டிஸ் (53) தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

மத்திய வரிசை தடுமாற்றம் காண வெறும் ஆறு ஓட்டங்களில் மூன்று விக்கெட்டுகள் பறிபோயின. மத்தியூஸ் 50 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

எனினும் நிரோஷன் திக்வெல்ல (ஆட்டமிழக்காது 39) மற்றும் சுரங்க லக்மால் (ஆட்டமிழக்காது 28) இருவரும் பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 66 ஓட்டங்களை பெற்று இலங்கை அணியை ஸ்திரமான நிலைக்கு இட்டுச் சென்றனர்.

இன்று போட்டியின் மூன்றாவது நாளாகும்.

Fri, 08/16/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக