கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் ஸ்ரீல.சு. க விரைவில் பேச்சு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் விரைவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள சு.கவின் 68 ஆவது தேசிய மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வடக்கு,கிழக்கு, தெற்கு என அனைத்து இடங்களிலிருந்தும் மக்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர். அன்றைய தினம் எமது கட்சியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அறிவிப்பார்.

ஜனாதிபதி வேட்பாளரே நாட்டில் பேசு பொருளாகியுள்ளது. நாங்கள் நபர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. நாட்டை வெற்றிக்கொள்ளும் வேலைத்திட்டத்திற்கே முன்னுரிமையளித்துள்ளோம். கடந்த வரலாறு முழுவதும் நபர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டே தேர்தல்கள் நடைபெற்றன. எமது கட்சியின் தனித்துவத்தை பாதுகாக்கும் வகையில் சிறந்த தீர்மானத்தை எடுப்போம். அதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் சு.க கரைந்து போகும்வகையில் தீர்மானங்களை எடுக்க மாட்டோம்.

எந்தப் பக்கம் செல்வோம் எனச் சிலர் கேட்கின்றனர்.எந்தப் க்கம் என்பது முக்கியமல்ல. நாட்டை வெற்றிக்கொள்ளும் வேலைத்திட்டத் த்திற்கும், எமது யோசனைகளுக்கு இணக்கம் வெளியிடும் தரப்புக்குமே ஆதரவளிப்போம். ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானமிக்க சக்தி நாம்தான். 15 இலட்சம் வாக்குகள் எமக்குள்ளன.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் போது நாம் ஐ.தே.கவுடன் இருந்தோம். இப்போது ஐ.தே.க. அரசில் நாம் இல்லை. அதனால் இன்னமும் எமது வாக்குவங்கி அதிகரித்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் மற்றும் திறந்த பொருளாதாரத்தால் 1977ஆம் ஆண்டுமுதல் நாடு அதலபாதாளத்துக்குள் சென்றுள்ளது. உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை மையப்படுத்திய பொருளாதாரம் இல்லை.

கடன் சுமை பில்லியன் கணக்கில் அதிகரித்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் காரணமாகவே யுத்தமொன்று ஏற்பட்டது. அதன்மூலம்தான் அந்த யுத்தம் முடிவுக்கும் கொண்டுவரப்பட்டது. தனிநபர் கடன் சுமை 5 இலட்சம்வரை அதிகரித்துள்ளது. ஒரு ஊதுபத்தியைகூட வெளிநாட்டிலிலிருந்தான் இறக்குமதி செய்கின்றோம். பெண்களின் உழைப்பை மையப்படுத்தியதாகவே எமது பொருளாதாரமுள்ளது. வெளிநாடுகளில் அடிமைச் சேவை செய்யும் பெண்களின் பணம்தான் எமது அந்நிய செலாவணியாகவுள்ளது. 1977ஆம் ஆண்டு 8 ரூபாவாக இருந்த டொலரின் பெறுமதி இன்று 180 ரூபாவாக மாறியுள்ளது. ஆகவே, நவீன யுகத்திற் குள் நுழைய சிறந்த வேலைத் திட்டமொன்று அவசியம். விரைவில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுகள் நடத்தவுள்ளோம். எமது வேலைத்திட்டங்கள் தொடர்பில் அவரிடம் தெரிவிப்போம். அதனை ஏற்றுக்கொண்டால் எமது கட்சியின் தனித்துவத்தை இழக்காதவாறு அவர்களுடன் இணைந்து செயற்பட தயராகவுள்ளோம் என்றார்.

 சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 08/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை