பொத்துவில் கனகர் கிராம மக்களின் காணி மீட்பு போராட்டத்திற்கு இரு வாரத்திற்குள் தீர்வு

கோடீஸ்வரன் எம்.பி

பொத்துவில் ஊரணி கிராம மக்களின் நிலமீட்பு போராட்டத்திற்கு இரு வாரத்திற்குள் தீர்வு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், 150 பேருக்கு வீடுகளை அமைப்பதற்கான அனுமதிகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பொத்துவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜின் தலைமையில் 252 பேருக்கு குறைவீடுகளை புனரமைப்புக்கான காசோலைகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி கருத்தினை தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்த மட்டில் ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினராக தான் தனித்து நின்று இம் மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொப்பதோடு எனக்கு கிடைக்கின்ற நிதிகளைக் கொண்டு அனைத்து கிராமங்களின் அபிவிருத்திகளுக்கு பங்கிட்டு வருகின்றேன்.

அம்பாறை தமிழர் பிரதேசங்களில் எந்தவொரு அபிவிருத்திகளும் பாரியளவில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்படவில்லை. இந்நிலையில் எனக்கு கிடைக்கும் நிதியைக் கொண்டு என்னால் முடிந்தளவு அபிவிருத்திகளை முன்னெடுத்து வருகின்றேன்.

மாட்டத்தில் பல முக்கிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன.

அதனையும் எதிர்வரும் வருடங்களில் மேற்கொள்வதற்கு முறையான திட்டங்களையும் தாம் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

பொத்துவில் கனகர்கிராம மக்களின் நில மீட்பு போராட்டத்திற்கு இன்னும் இரு வாரங்களில் தீர்வுகள் எட்டப்படவுள்ளதுடன் 150 குடும்பங்களுக்கு வீடுகளும் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இந்நிலையில் நாட்டில் தமிழ் மக்கள் எப்போதும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பயணிக்க வேண்டும். எப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலம் குறைவடைகின்றதோ அன்று தமிழர்களின் உரிமைக் குரலும் நசுக்கப்படும் என்பதனை தமிழ் மக்கள் மறந்துவிடக்கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

திருக்கோவில் தினகரன் நிருபர்-

Mon, 08/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை