ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயாராகி விட்டேன்

பிரேமதாசாக்கள் ஒருபோதும் தோற்றதில்லை -அமைச்சர் சஜித்

மக்களுக்காகத் தன்னை அர்ப்பணிக்கும் நோக்கில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராகிவிட்டதாக அமைச்சர் சஜித் பிரேமதாசா தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கும்புறுமூலையில் இந்திய நிதி உதவியில் அமைக்கப்பட்ட காந்தி மாதிரிக் கிராமம் மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அல்மஜ்மா நகரில் அமைக்கப்பட்ட முகைதீன் அப்துல் காதர் மாதிரிக் கிராமங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலே, அவர் இவ்வாறு தெரிவித்தார். ஓட்டமாவடி அமீரலி விளையாட்டு மைதானத்தில் நிகழ்ந்த இக்கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர்: மக்களுக்காக என்னை அர்ப்பணிப்பதே எனது நோக்கம்.தேசிய பாதுகாப்பு, சிறந்த முற்போக்கு,ஐக்கிய இலங்கையைக் கருத்திற்கொண்டு எனது சேவைகள் முன்னெடுக்கப்படும்.

உங்களால் வெல்ல முடியுமா?, வெற்றி பெறுவீர்களா எனச் சிலர் கேட்கின்றனர். அமரர் பிரேமதாச தேர்தலில் தோல்வியுற்றதில்லை. அவருடைய புதல்வரான நானும் தோற்கப் போவதில்லை. இந்தமுறை வெல்லப் போவது பிரேமதாச மாத்திரமல்ல மக்களுக்கும் வெற்றி கிட்டப்போகின்றது. சிம்மாசனத்தில் அமர்வதற்கு ஆசைப்படுபவன் நானல்ல.

புதிய பாதையை புதிய வேலைத் திட்டங்களை மக்கள் எதிர் நோக்குகின்றனர். தொழில் முயற்சி, தொழில்நுட்பத்தினூடாகவே,நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். நாட்டின் இயற்கை வளங்களைக் கொண்டு பாரியளவிலான கைத் தொழில் முயற்சிகள் முன்​னெடுக்கப்படவில்லை

நான் உங்கள் மத்தியில் வீணான பேச்சுக்களைப் பேசவரவில்லை. வெறும் பேச்சில் மாத்திரம் தங்கியிருப்பவனும் நானல்ல. நவம்பர் மாதத்தில் நீங்கள் எடுக்கும் முடிவு சரியான முடிவாக இருந்தால் அந்த முடிவின் பால் செயற்பட ஆசைப்படுகின்றேன். நாட்டிலுள்ள 332 பிரதேச செயலகங்களிலும் தொழிற்சாலைகள், தொழில்பேட்டைகளை அமைக்க எண்ணியுள்ளேன். காலஞ்சென்ற எனது தந்தை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச இறுநூறு தொழில் பேட்டைகளை அமைத்தார். இதனால் ஏழை எழிய மக்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் கிடைத்தன. எனது தந்தை வழியில் செல்வதே எனது நோக்கம்.இவ்வாறு அவர் உரையாற்றினார்.

இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.ஈ.தரங்ஜித் சிங் சன்து, இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட சிரேஷ்ட முகாமையாளர் க.ஜெகநாதன், தேசிய வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள், மதகுருமார்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கும்புறுமூலையில் நிர்மாணிக்கப் பட்ட காந்தி மாதிரிக் கிராமத்தில் 25 வீடுகளும் அல்மஜ்மா நகரில் நிர்மாணிக்கப்பட்ட முகைதீன் அப்துல் காதர் மாதிரிக் கிராமத்தில் ஐம்பது வீடுகளும் மக்களிடம் கையளிக்கப்பட்டன.

கல்குடா தினகரன் நிருபர்

Mon, 08/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை