நீதிமன்றத் தீர்ப்பு தாமதமானால் பாராளுமன்றில் தீர்மானம்

மாகாண சபைத் தேர்தல்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு வழிகாட்டலுடன் கூடிய நீதிமன்றத் தீர்ப்பு விரைவில் கிடைக்காதுவிடின், ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னராவது அத்தேர்தலை நடத்தும் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுமாறு தேர்தல் ஆணைக்குழு கேட்டுள்ளது.

இதற்கிணங்க விகிதாசார பிரதிநிதித்துவ முறை உள்ளடக்கப்பட்டுள்ள  1988 ஆம் ஆண்டின் மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தை செல்லுபடியுள்ளதாக்கும் வகையில் புதிய சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுமாறும் தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளது.

பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சகல அரசியல் கட்சிகளுக்கும் இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தற்போது அமுல்படுத்த முடியாத நிலையிலுள்ள 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டத் திருத்தங்களை ஒருபுறம் வைத்துவிட்டு, ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரேனும் மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடிய வகையில் 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபை தேர்தல் சட்டத்தை செல்லுபடியாக்கும் வகையில் புதிய சட்டத்தை நிறைவேற்றுமாறே ஆணைக்குழு கேட்டுள்ளது.

2019 நவம்பர் 10 மற்றும் டிசம்பர் 08 ஆம் திகதிகளுக் குமிடையில் நடாத்தப்படவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கேற்ற, உரிய சட்ட சூழ்நிலையை பாராளுமன்றத்தினூடாக ஏற்படுத்த முடியாதுள்ளதை ஆணைக்குழுவுக்கு கடந்த ஜுலை மாதம் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சபாநாயகரும் மாகாண சபைத் தேர்தலை ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் நடத்துவதே சகல அரசியல் கட்சிகளினதும் எதிர்பார்ப்பென்றும் அறிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் படி உரிய தேர்தல்களை உரிய காலத்தில் நடத்துவது தாமதப்படுமாயின் அது ஜனநாயக முறைமைக்கு முற்றிலும் முரணானது.

எனினும் நாட்டின் இறைமையின் கீழான சட்டவாக்கத் தத்துவம் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாலும் சட்டத்தை நிலைநாட்டும் பொறுப்பு நீதிமன்றத்தின் வசம் இருப்பதாலும் மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரமில்லை என்றும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பழைய முறையின் கீழ் தேர்தலை நடத்துவது உகந்ததென தேர்தல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

அதேபோன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அது தொடர்பில் செல்லுபடியாகும் சட்டம் தொடர்பிலான வியாக்கியானத்தை உயர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

இதற்கு சிறந்த பதில் கிடைக்குமாயின் மாகாண சபை தேர்தலை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நடத்த முடியும். எனினும் 2019 அக்டோபர் மாதத்தின் இரண்டாம் வாரம்கடந்த பின்னர் அவ்வாறு மாகாண சபைத் தேர்தலை நடத்துவது, ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்கு தடையாக அமையக்கூடு மென்றும் இதற்கிணங்க துரிதமாக ஒரு தீர்ப்பு கிடைக்க வேண்டுமென்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Thu, 08/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை