பாலியல் குற்றச்சாட்டில் கருதினால் ஜோர்ஜ் பெல் மேன்முறையீடு ரத்து

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட மிக சிரேஷ்ட கத்தோலிக்க மதகுருவான கருதினால் ஜோர்ஜ் பெல், அவுஸ்திரேலியாவில் தன் மீதான குற்றச்சாட்டுகளை ரத்துச் செய்வதற்கான சட்ட முயற்சிகளில் தோல்வி அடைந்துள்ளார்.

1990களில் மெல்பேர்ன் கருதினலாக இருந்தபோது இரு சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக அவர் கடந்த மார்ச் மாதம் குற்றங்காணப்பட்டு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு உள்ளானார். எனினும் தான் குற்றமற்றவர் என்று தொடர்ந்து கூறி வந்தார்.

இந்நிலையில் இந்தத் தீர்ப்பு நியாயமற்றது என்று பெல் செய்த மேற்முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

வத்திக்கானின் முன்னாள் பொருளாளரான 78 வயது பெல், அவுஸ்திரேலியாவின் உச்ச நீதிமன்றத்தில் தனது இறுதி மேன்முறையீட்டை செய்ய எதிர்பார்த்துள்ளார்.

புனித பெட்ரிக் தேவாலயத்தில் 13 வயது சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக கடந்த டிசம்பரில் யூரி சபை ஒன்று ஒருமனதாக தீர்ப்பளித்திருந்தது.

எனினும் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் தன் மீது குற்றம்சாட்டுவதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்காத நிலையில் இது “நியாயமற்றது” என்று பெல் தனது மேற்முறையீட்டில் வாதிட்டுள்ளார்.

எனினும் விக்டோரியாவின் மேற்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட குழு 2–1 என்ற அடிப்படையில் நிராகரித்தது.

பாப்பரசரின் நெருக்கமான ஆலோசகரான பெல் மீதான தீர்ப்பு கத்தோலிக்க திருச்சபையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அவுஸ்திரேலிய மதகுருவுக்கு 2022 ஒக்டோபர் மாதத்திலேயே பிணை பெறுவதற்கு தகுதி உள்ளது.

Thu, 08/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை