குவான்டமாலாவின் ஜனாதிபதியாக அலெஜான்ட்ரோ கியாமட்டோ தெரிவு

குவான்டமாலாவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பழைமைவாதக் கட்சியான வமோஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட அலெஜான்ட்ரோ கியாமட்டே வெற்றி பெற்றுள்ளார். 63 வயதுடைய முன்னாள் சத்திரசிகிச்சை நிபுணரான அலெஜான்ட்ரோ கியாமட்டோ, 58.26 வீதமான வாக்குகளைப் பெற்று தனது வெற்றியை உறுதிப்படுத்தினார்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட குவான்டமாலாவின் முன்னாள் முதல்பெண்மணி சன்ட்ரா டோரஸ் 40 வீத வாக்குகளை மாத்திரமே பெற்றுத் தோல்வியடைந்தார்.

"எமது நாட்டுக்குப் புதிய அத்தியாயமொன்று உருவாகியுள்ளது"என வெற்றியின் பின்னர் கட்சித் தலைமையகத்தில் உரையாற்றிய அலெஜான்ட்ரோ கியாமட்டோ தெரிவித்தார்.

வன்முறை, வரட்சி மற்றும் ஊழல்களால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய அமெரிக்க நாடான குவான்டமாலாவின் ஜனாதிபதித் தேர்தலில் கியாமட்டோ இம்முறை நான்காவது தடவையாகப் போட்டியிட்டார். இவர் 2020 ஜனவரி 14ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.

இவருக்கு அந்நாட்டின் வர்த்தக சமூகம் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் எனப் பலரும் ஆதரவு வழங்கியிருந்தனர். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜிம்மி மோரல்ஜூக்கு எதிரான பிரசாரத்தில் சன்ட்ரா டோரஸ் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதனை மையமாகக் கொண்டு டோரஸூக்கு எதிரான வாக்குகள் கியாமட்டோவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

குற்றச்செயல்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்றும், குழு மோதல்களில் ஈடுபடும் நபர்களை பயங்கரவாதிகள் போன்று நடத்துவேன் என்றும், மரண தண்டனையை சட்ட ரீதியனதாக்குவதுடன், குவான்டமாலாவிலிருந்து குடிபெயர்வதைத் தடுக்கும் வகையிலான முதலீடுகளைக் கொண்டுவருவேன் என்றும் அவர் பிரசாரங்களை முன்னெடுத்திருந்தார்.

இவருடைய வெற்றி குவான்டமாலாவிலுள்ள ஜனநாயக பாதுகாவலர்கள் மத்தியில் எச்சரிக்கை உணர்வைத் தூண்டியுள்ளது. எல்ஜிபிடி சமூகத்துக்கு எதிராகப் பேசுபவர்கள் மற்றும் அதற்கு எதிராக போராடுபவர்களுக்கு சார்பாக தனது அதிகாரங்களைப் பயன்படுத்தவிருப்பதாகவும் கூறியிருந்தார்.

Tue, 08/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை