கடவுளின் தேசமான கேரளாவில் கால் நூற்றாண்டு காணாத பிரளயம்!

தொடர்மழை, நிலச்சரிவினால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு; மண்ணுக்குள் புதைந்து போன கிராமங்கள்

கால்நூற்றாண்டுகளில் இல்லாத இரண்டாவது பிரளயத்தைச் சந்தித்துள்ளது கடவுளின் தேசமான கேரளம். கடந்த வருடம் ஏற்பட்ட சோகத்தின் நினைவு தினம் கூட அனுசரிக்கப்படவில்லை, அதற்குள் மீண்டும் பெரிய சோகத்தை சந்தித்து வருகிறது. எங்கு பார்த்தாலும் மழை, வெள்ளம். அம்மாநிலமே துயரத்தைச் சந்தித்து வருகிறது.

பெருமழை நேற்றுமுன்தினம் சற்று ஒய்ந்துள்ள போதிலும் நிலச்சரிவுதான் இந்தமுறை கேரள மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கவலப்பாரா, வயநாட்டில் உள்ள புதுமலா என இரண்டு கிராமங்கள் மண்ணில் புதையுண்டு இன்றோடு மூன்று நாள்களுக்கு மேலாகிறது. இதில் சிக்கியிருக்கிறவர்களின் நிலை என்னவென்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கடுமையான மழை பெய்ததால் பல இடங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. பலர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். மலப்புரம், வயநாடு, கண்ணூர், கோழிக்கோடு, காசர்கோடு மாவட்டங்களில் மிக அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மலப்புரம், வயநாடு மாவட்டங்களில் நிலச்சரிவுகளில் ஏராளமானோர் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகளும் சேதம் அடைந்துள்ளன. மலப்புரம் மாவட்டம் கவளப்பாறையில் ஏற்பட்டுள்ள பயங்கர நிலச்சரிவில் 63 பேர் சிக்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதுவரை 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 50 பேர் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கேரள மாநிலம் முழுவதும் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 100 இற்கு மேலாகும்.ஆனால் உயிரிழந்தோர் எண்ணிக்ைக மிகவும் அதிகமென்று கூறப்படுகிறது. மீட்பு பணியை தேசிய பேரிடர் மீட்பு படையினரும், இராணுவத்தினரும் தீவிரப்படுத்தி உள்ளனர்.

3 நாட்கள் இடைவிடாது பெய்த மழையில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்தனர். மழை கேரளாவை புரட்டிப் போட்டு வருகிறது. குறிப்பாக வடகேரளத்தில் மலை கிராமங்களை மழை மூழ்கடித்து விட்டது.

நகர்ப்புறங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்வது வழக்கம். ஆனால் மலைகிராமங்களில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. சுமார் 10 முதல் 12 அடி ஆழத்திற்கு வீடுகள் புதைந்து போனது. வீடுகளுக்குள் இருந்தவர்கள் உயிரோடு மண்ணுக்குள் புதைந்து போனார்கள்.

கிராமங்களில் வசித்தவர்களை மீட்கச் சென்ற மீட்புப் படையினர் மண்ணுக்குள் புதைந்தவர்களை பிணமாக மீட்டு வருகிறார்கள். கவளப்பாறையில் 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. புதுமலையில் 4 பேர் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த 2 கிராமங்களிலும் சுமார் 80 பேர் மண்ணில் புதைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவர்களில் இதுவரை 17 பேர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 58 பேரை காணவில்லை. அவர்களும் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வீடுகளின் மீது மரம் முறிந்தும், மின்கம்பங்கள் சரிந்து விழுந்தும் சேதமாகி உள்ளன.

முகாம்களில் 77 ஆயிரத்து 688 குடும்பங்களைச் சேர்ந்த 2.61 இலட்சம் பேர் தஞ்சம் அடைந்துள்ளனர். கேரளா முழுவதும் நேற்றுமுன்தினம் பிற்பகலுக்கு மேல் மழை சற்று குறைந்துள்ளது. இதனால் மழைநீர் தேங்கி இருந்த பகுதிகளில் தண்ணீர் வடிந்து வருகிறது. மலை கிராமங்களிலும் மீட்பு பணி தீவிரம் அடைந்துள்ளது.

மழை நேற்று ஓய்ந்திருந்தாலும் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கண்ணூர், காசர்கோடு, வயநாடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

 

Tue, 08/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை