Header Ads

பிரெக்‌ஸிட்டினால் ஐரோப்பாவில் மருந்துத் தட்டுப்பாடு ஏற்படலாம்

நிபுணர்கள் எச்சரிக்கை

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கு ஒக்டோபர் 31ஆம் திகதி காலக்கெடு வழங்கப்பட்டுள்ள நிலையில், பிரெக்‌ஸிட்டுக்கான ஒப்பந்தம் சரியான முறையில் நிறைவேற்றப்படாவிட்டால் ஐரோப்பாவில் சில மருந்துப்பொருட்களுக்கு மோசமான தட்டுப்பாடு ஏற்படும் என சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பிரெக்ஸிட்டுக்கான ஒப்பந்தம் சரியான முறையில் நிறைவேற்றப்படாவிட்டால் தூய உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்றும், ஏற்கனவே இதற்கான சூழலுக்கு முகங்கொடுத்திருப்பதாகவும் பிரித்தானிய உணவு மற்றும் குடிபானத் துறையினர் எச்சரித்துள்ளனர். இதுபோன்ற நிலைமை மருந்துகளுக்கும் ஏற்படலாம் என மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அப்படியான தட்டுப்பாட்டு நிலைமை ஏற்பட்டால் விமான மூலம் அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான முற்கூட்டிய ஓடர்களும் வழங்கப்பட்டுள்ளன.

மருந்துப் பொருட்களுக்கான விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பு பிரித்தானியாவைத் தாண்டியதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் பிரித்தானியாவிலிருந்து 45 மில்லியன் மருந்துப் பக்கற்றுக்கள் கப்பல்கள் மூலம் ஏனைய பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. 2016ஆம் ஆண்டில் 12 பில்லியன் பவுன்ட் பெறுமதியான மருந்துப் பொருட்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

சரியான ஒப்பந்தமின்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகிக் கொண்டால் சில தடைகள் ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது குறித்த விடயத்தில் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு ஐரோப்பிய ஒன்றியம் மறுத்தால் எந்தவித ஒப்பந்தமும் இன்றி பிரித்தானியா விலகிக் கொள்ளும் அந்நாட்டின் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்திருந்தார்.

பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இடையில் மருந்துகள் அனுப்பப்படும்போது சுங்கம் மற்றும் துறைமுக செயற்பாடுகளில் குழப்பங்கள் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

Tue, 08/13/2019 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.