வட கொரியா மேலும் ஏவுகணை சோதனை

அடையாளம் தெரியாத இரண்டு ஏவுகணைகளை ஏவி மீண்டும் சோதனை செய்துள்ளது வட கொரியா. இரு வாரங்களில் வட கொரியா நான்காவது முறையாக இவ்வாறு செய்துள்ளது என தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

தென் ஹ்வாங்ஹே மாகாணத்தில் இருந்து, கிழக்கில் உள்ள கடல் பகுதிக்கு இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையை கண்காணித்து வருவதாகவும், தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் தென் கொரியா திங்கட்கிழமை மேற்கொண்ட கூட்டு இராணுவப் பயிற்சி குறித்த தனது கோபத்தை இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளது வட கொரியா.

இந்த வருடாந்திர கூட்டு இராணுவ பயிற்சிகள் ஆடம்பரமாக நடைபெறவில்லை. எனினும், இது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் தென் கொரிய தலைவர் மூன் ஜே இன் ஆகியோருடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை மீறும் வகையில் அமைந்துள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது.

அந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் இல்லை என்று அது குறிப்பிட்டது.

அமெரிக்காவும் தென் கொரியாவும் சினத்தைத் தூண்டும் வகையிலான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டால், அவற்றுக்குத் தீர்வுகாண வேறு வழிகளை நாடவிருப்பதாக வட கொரியா கூறியது.

இந்த போர் பயிற்சி தற்காப்பு நடவடிக்கை என்று அமெரிக்கா மற்றும் தென் கொரியா கூறுகின்றபோதும் அது போருக்கான தயார்படுத்தல் என்று வட கொரிய காருதுகிறது. அணு ஆயுதங்களை தயாரிப்பதாகவும், ஏவுகணை சோதனைகள் செய்வதாகவும் கூறி அமெரிக்காவும் மற்றும் உலக நாடுகளும் வட கொரியா மீது பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Wed, 08/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை