ஜி7 நாடுகளின் உதவியை நிராகரித்தது பிரேசில் அரசு

பற்றியெரியும் அமேசன்:

அமேசன் மழைக்காட்டில் ஏற்பட்டிருக்கும் தீயை கட்டுப்படுத்த ஜி7 நாடுகளின் உதவியை பிரேசில் அரசாங்க நிராகரித்துள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன் தலைமையில் பிரான்சில் நடைபெற்ற ஜ7 மாநாடு கடந்த திங்கட்கிழமை முடிவுற்றது. இதில் அமேசன் காட்டுத் தீயை கட்டுப்படுத்த 22 மில்லியன் டொலர் நிதி சேகரிக்கப்பட்டது.

இந்தப் பணம் தேவையில்லை என்று குறிப்பிடும் பிரேசில் அமைச்சர்கள் வெளிநாட்டு சக்திகள் அமேசனை கைப்பற்ற முயற்சிப்பதாக குற்றம்சாட்டினர்.

உலகின் மிகப்பெரிய மழைக்காடான அமேசன் பற்றி எரியும் தரவுகள் செய்மதிப் படங்கள் மூலம் வெளியானதோடு அது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

ஜி7 நாடுகளின் உதவி குறித்து கருத்து வெளியிட்ட பிரேசில் ஜனாதிபதி ஜெயீர் பொல்சொனாரோவின் தலைமை பணியாளர் ஒனிக்ஸ் லொரன்சோனி, “நன்றி, ஆனால் அந்தப் பணம் ஐரோப்பாவில் காடு வளர்ப்பதற்கு அதிகம் தேவைப்படும்” என்றார்.

“மக்ரோனினால் உலக மரபுரிமை சொத்தான தேவாலயத்தில் தீ ஏற்பட்டதைக் கூட முன்னறிவிக்க முடியவில்லை, அவர் எமக்கு பாடம் கற்பிக்க விரும்புகிறாரா?” என்று லொரன்சோனி மேலும் குறிப்பிட்டார். பாரிசில் கடந்த ஏப்ரல் மாதம் ரொட்ரே டாம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீச் சம்பவத்தையே இதில் அவர் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

காடழிப்புக்கு எதிராக போராட ஐ.நா காலநிலை ஒப்பந்தத்தின் கீழ் ஏற்கனவே பொறிமுறை ஒன்று உள்ளது என்று பிரேசில் வெளியுறவு அமைச்சர் ஏர்னஸ்டோ அரவுஜோ குறிப்பிட்டுள்ளார்.

“அமேசனை வெளியில் இருந்து கட்டுப்படுத்துவதற்காக உண்மையான சுற்றுசூழல் விவகாரங்களுக்கு அப்பால் இட்டுக்கட்டப்பட்ட போலிக் காரணிகள் மூலம் சில அரசியல் முயற்சிகள் இடம்பெறுவதற்கான ஆதாரங்கள் உள்ளன” என்று அவர் ட்விட்டரில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமேசனில் அதிக அளவில் ஏற்பட்டிருக்கும் காட்டுத் தீகளை கட்டுப்படுத்த தம்மிடம் போதி வளம் இல்லை என்று பொல்சொனாரோ கூறியிருந்தார்.

எனினும் ஜி7 நாடுகள் இந்த சூற்றுச்சூழல் பேரழிவு தொடர்பில் போதிய அவசரம் காட்டவில்லை என்று கிரீன்பீஸ் பிரான்ஸ் அமைப்பு விபரித்துள்ளது.

இந்த மழைக்காட்டுக்கு உதவ ஹொலிவுட் நடிகர் லியனார்டோ டிகெப்ரியோ 5 மில்லியன் டொலரை கடந்த திங்கட்கிழமை வாக்குறுதி அளித்திருந்தார்.

பிரான்சின் பியரிட்சில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் பிரிட்டன் நாட்டு தலைவர்கள் ஒன்றுகூடியபோதே இந்த 22 மில்லியன் டொலர் நிதி உதவி அறிவிக்கப்பட்டது.

இந்த நிதியானது உடன் கிடைக்கப்பெறும் என்று மக்ரோன் குறிப்பிட்டார். அதிக தீயணைப்பு விமானங்களுக்கு செலவிட இது பயன்படுத்தப்படும் என்று குறிப்பிட்ட அவர், பிராந்திய இராணுவத்திற்கு உதவவும் இது பயன்படுத்தப்படும் என்று கூறினார்.

எனினும் பிரான்ஸ் தலைவர் அமேசன் பிராந்தியத்திற்கு எதிராக நியாயமற்ற மற்றும் தேவையற்ற தாக்குதல்களை தொடுப்பதாக பிரேசில் ஜனாதிபதி சாடியுள்ளார். ஜி7 நாடுகளின் கூட்டணிக்கு பின்னால் தனது நோக்கத்தை மறைத்து வைத்திருப்பதாகவும் அவர் கூறினார். பிரான்ஸ் மற்றும் பிரேசில் ஜனாதிபதிகளுக்கு இடையே அண்மைய வாரங்களில் முறுகல் போக்கு ஒன்று நீடித்தமை குறிப்பிடத்தக்கது.

பிரேசிலின் இயற்கை வளத்தை கைப்பற்ற ஐரோப்பிய நாடுகள் முயற்சிப்பதாக ஜனாதிபதி பொல்சொனாரோ நீண்ட காலமாக குற்றம்சாட்டி வருகிறார். பிராந்தியத்தில் கால் வைப்பதற்கே ஐரோப்பா அமேசன் மீது ஆர்வம் காட்டுவதாக அவர் கூறி வருகிறார்.

அமேசனின் 60 வீதமானது பிரேசிலில் இருப்பதோடு பொலிவியா, கொலம்பியா, ஈக்வடோர், பிரெஞ்ச் குவைனா, கயானா, பெரு, சுரினாம் மற்றும் வெனிசுவேலா ஆகிய நாடுகளிலும் அது பரந்துள்ளது.

எனினும் சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து காட்டுத் தீயை கட்டுப்படுத்துவதற்கு பிரேசில் நிர்வாகம் கடந்த வெள்ளி அன்று கடும் நடவடிக்கைகளை எடுத்தது.

அமேசனில் சுற்றுச்சூழல் குற்றங்கள் மற்றும் தீயிணை அணைக்க 44,000 படையினர் நிறுத்தப்பட்டதாக பிரேசில் அறிவித்தது. உள்ளுர் நிர்வாகங்களின் உதவிக் கோரிக்கைகளை அடுத்து ஏழு மாநிலங்களில் தீயை அணைப்பதற்கு இராணுவம் தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

பிரேசிலில் வரண்ட பருவத்தில் காட்டுத் தீ பரவுவது வழக்கமானது என்றபோதும், அது இந்த ஆண்டு 85 வீதம் அதிகரித்திருப்பதாக பிரேசிலின் விண்வெளி ஆய்வுக்கான தேசிய நிறுவனம் வெளியிட்ட தரவுகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன்போது பிரேசிலில் உள்ள அமேசன் காட்டில் ஒரே சமயத்தில் ஆயிரம் இடங்களில் தீப்பற்றி எரிகிறது. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அமேசன் மழைக்காடு பல முறை பற்றி எரிகிறது என எச்சரிக்கிறது பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகாமை.

2019 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 75,000க்கும் மேற்பட்ட காட்டுத் தீ சம்பவங்கள் பாதிவாகி இருப்பதோடு அதில் அதிகப் பெரும்பான்மையானவை அமேசன் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது.

இங்கு மூன்று மில்லியன் தாவர வகைகளும், விலங்குகளும் உள்ளன. மேலும் ஒரு மில்லியன் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர்.

இதற்கு சுற்றுச்சூழல் தொடர்பில் ஜனாதிபதி பொல்சொனாரோவின் செயற்பாடுகள் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசன் காடுகள் ஒட்சிசன் வெளியிடுவதுமட்டுமல்லாமல் மனிதன் வெளியிடும் கரிமவாயுக்களை உட்கொள்வதிலும் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன.

இந்த தீ சம்பவங்கள் குறித்து அரசுகள் தலையிடக் கூறி உலகெங்கும் பல ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. மழைக்காடுகளை பாதுகாக்கும்படி பாப்பரசர் பிரான்சிஸும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விடுத்திருந்தார்.

Wed, 08/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை