ஆஷஸ் போட்டி: இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 374 ஓட்டங்கள்

பர்மிங்ஹாமில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸுக்காக 374 ஓட்டங்கள் குவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான முதலாவது ஆஷஸ் டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 284 ஓட்டங்களை பெற்றது.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி, 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 267 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பர்ன்ஸ் 125 ஓட்டங்களுடனும், ஸ்டோக்ஸ் 38 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

கடந்த சனிக்கிழமை ஆரம்பமான 3ஆம் நாள் ஆட்டத்தில் அரைசதம் அடித்த பென் ஸ்டோக்ஸ் 50 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, பர்ன்ஸ் 133 ஓட்டங்களில் லையன் பந்துவீச்சில் வெளியேறினார். பின்னர் வந்த பேர்ஸ்டோக்ஸ், மொயீன் அலி ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் அடுத்தடுத்து வெளியேறினர்.

எனினும், ஸ்டூவர்ட் பிரோட் தனது பங்குக்கு 29 ஓட்டங்கள் எடுத்தார். அதேபோன்று கிறிஸ் வோக்ஸ் 37 ஓட்டங்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

அண்டர்சன் ஆட்டமிழந்ததும் இங்கிலாந்து அணி 374 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அவுஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ், லையன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், பட்டின்சன் மற்றும் சிடில் இருவரும் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அதன் பின்னர் அவுஸ்திரேலியா 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த பான்கிராப்ட் (7), வோர்னர் (8) ஆகியோர் விரைவிலேயே வெளியேறினர். அடுத்து வந்த கவாஜா 40 ஓட்டங்கள் எடுத்து ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட் இருவரும் நிதானமாக ஆடினர். 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 124 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

Mon, 08/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை