மாலைதீவு முன்னாள் துணை ஜனாதிபதி பொலிஸாரால் கைது

அரசாங்க நிதிகளை மோசடி செய்த குற்றச்சாட்டில் இருந்து தப்புவதற்கு இந்தியாவில் தஞ்சம் கோர முயன்ற மாலைதீவு முன்னாள் துணை ஜனாதிபதி அஹமது அதீப் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உள்நாட்டில் ஊழல் குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் 37 வயதான அதீபின் தஞ்சக் கோரிக்கையை இந்தியா நிராகரித்தது. அதீப் கடந்த வியாழக்கிழமை விசைப் படகு ஒன்றின் மூலம் தமிழ் நாட்டின் தூத்துக்குடியை வந்தடைந்தார்.

முறையான ஆவணங்கள் இல்லாத நிலையில் அவருக்கு இந்திய நிர்வாகம் அனுமதி மறுத்தது. முன்னாள் துணை ஜனாதிபதி மற்றும் மேலும் ஒன்பது பேரை இந்திய கரையோரப் படையினர் கடந்த சனிக்கிழமை மாலைதீவு பாதுகாப்பு படையினரிடம் கையளித்துள்ளனர்.

மாலைதீவு ஜனாதிபதியாக அப்துல்லா யாமீன் இருந்தபோது அவர் சென்ற படகில் குண்டுவைத்து 2015 செப்டம்பரில் அவரைக் கொலை செய்ய முயன்றதாக பாராளுமன்றத்தால் அதே ஆண்டு நவம்பரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதீப், 2016இல் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mon, 08/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை