96 ஓட்ட வெற்றி இலக்கை போராடி எட்டிய இந்திய அணி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 96 ஓட்ட இலக்கை விரட்டிய இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

அமெரிக்காவின் புளோரிடா மாநில லாடர்ஹில் நகரில் உள்ள சி.பி.ஆர் பார்க் மைதானத்தில் சனிக்கிழமை நடந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித் தலைவர் கோஹ்லி களத்தடுப்பை தேர்வு செய்தார்.

மேற்கிந்திய தீவுகள் அணியில் கெம்பல், லுவிஸ் ஆரம்ப வீரர்களாக களமிறங்கினர். வொஷிங்டன் சுந்தர் வீசிய ஆட்டத்தின் 2ஆவது பந்திலேயே கெம்பல் டக் அவுட்டானார். புவனேஸ்வர் குமார் வீசிய அடுத்த ஓவரில் லுவிசும் டக் அவுட்டாக, மேற்கிந்திய தீவுகளுக்கு அதிர்ச்சி ஆரம்பமாக அமைந்தது. அடுத்ததாக அறிமுக வீரர் நவ்தீப் ஷைனி தனது முதல் ஓவரில் பூரன் (20), ஹெட்மயர் (0) விக்கெட்டை அடுத்தடுத்த பந்துகளில் கைப்பற்றினார்.

அடுத்து வந்தவர்களும் ஒற்றை இலக்க ஓட்டங்களில் வெளியேற, மறுமுனையில் அதிரடி வீரர் போலார்ட் மட்டும் தாக்குபிடித்து அதிகபட்சமாக 49 பந்தில் 49 ஓட்டங்கள் எடுத்து ஷைனி பந்தில் ஆட்டமிழந்தார்.

மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 95 ஓட்டங்கள் எடுத்தது.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியும் தடுமாற்றத்துடனே விளையாடியது. தவான் 1 ஓட்டத்தில் வெளியேறினார். ரோஹித் 24, கோஹ்லி 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். ரிஷப் பண்ட் முதல் பந்திலேயே டக் அவுட்டானார். மணிஷ் பாண்டே 19, குருணல் பாண்டியா 12 ஓட்டங்களில் வெளியேறினர். 6 விக்கெட்டுகள் பறிபோனாலும், குறைவான இலக்கு என்பதால் இந்திய அணிக்கு பெரிய அளவில் நெருக்கடி ஏற்படவில்லை.

வொஷிங்டன் சுந்தர் சிக்சர் அடித்து போட்டியை முடித்து வைத்தார். இந்திய அணி 17.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 98 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Mon, 08/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை