டி20யில் அதிக சிக்ஸர் விளாசி ரோஹித் சர்மா புதிய சாதனை

சர்வதேச டி-20 போட்டியில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் ரோஹித் சர்மா படைத்துள்ளார்.

புளோரிடாவில் நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2ஆவது டி-20 போட்டியில் ரோஹித் சர்மா 3 சிக்சர்கள் விளாசினார். இதன் மூலம் சர்வதேச டி-20 போட்டியில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் என்ற கிறிஸ் கெயிலின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

தற்போது ரோஹித் சர்மா 107 சிக்சர்களுடன் முதலிடத்திலும், கிறிஸ் கெயில் 105 சிக்சர்களுடன் 2ஆவது இடத்திலும், நியூசிலாந்து வீரர் கப்டில் 103 சிக்சர்களுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.

இதுமட்டுமின்றி டி-20 போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் (2422 ஓட்டங்கள்), அதிக அரைச்சதம் (21) மற்றும் அதிக சதம் (4) அடித்த வீரர்கள் பட்டியலிலும் ரோஹித் சர்மாவே முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் டக்வர்த் லுவிஸ் முறைப்படி இந்திய அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா அபார ஆரம்பத்தை அளித்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 167 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரோஹித் 3 சிக்சர், 6 பவுண்டரி என 51 பந்துகளில் 67 ஓட்டங்கள் எடுத்தார்.

168 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது. 15.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 98 ஓட்டங்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் டக்வர்த் லுவிஸ் முறைப்படி இந்திய அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 2–0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

Tue, 08/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை