இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு 2000 விண்ணப்பம்

மஹேல விண்ணப்பிக்கவில்லை

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு, இதுவரை 2000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை இந்திய கிரிக்கெட் சபை பெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளது. எனவே, புதிய பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பி.சி.சி.ஐ அறிவித்தது. அதனைத் தொடர்ந்து முன்னாள் வீரர்கள் பலர் விண்ணப்பித்து வருகின்றனர்.

இலங்கையின் முன்னாள் வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளருமான மஹேல ஜயவர்தன, இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால், அவர் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

பெங்களுர் மிரர்ஸ் எனும் பத்திரிகையின் அறிக்கையின்படி, தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு சவால் விடக்கூடிய வகையிலான நபருக்கு பற்றாக்குறை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அவுஸ்திரேலிய முன்னாள் சகலதுறை வீரர் டொம் மூடி, நியூசிலாந்தின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன், இந்தியாவின் ரொபின் சிங், லால்சந்த் ராஜ்புத் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர்.

இதுவரை 2000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதால், அனைத்து பெயர்களையும் மதிப்பீடு செய்ய பி.சி.சி.ஐ அதிக நேரம் எடுக்கக்கூடும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்திய கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டி தொடர்களில் ஆடுகிறது.

திடீரென புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய முடியாத நிலையில் இந்த தொடருக்கும் ரவி சாஸ்திரியே பயிற்சியாளராக சென்றுள்ளார். இதனால் இவரது பதவிக்காலம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதிய பயிற்சியாளருக்கான தேர்வு வரும் வாரம் நடைபெற உள்ளது. தற்போதைய தலைமை பயிற்சியாளர் என்ற முறையில் விண்ணப்பிக்காமலேயே பயிற்சியாளர் தேர்வுக்கு ரவி சாஸ்திரியும் தகுதி பெற்றுள்ளார். இதனால் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதில் கடும் போட்டி நிலவுகிறது.

Sat, 08/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை