அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இலங்கை அணி இன்று பலப்பரீட்சை

மியன்மாரில் இன்று ஓகஸ்ட் மாதம் 3ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 16 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கனிஷ்ட கரப்பந்தாட்டத் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி கடந்த புதன்கிழமை மியன்மார் நோக்கி பயணமாகியது.

மூன்றாவது தடவையாக நடைபெறவுள்ள இம்முறை ஆசிய கனிஷ்ட கரப்பந்தாட்டத் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை கனிஷ்ட கரப்பந்தாட்ட அணியை ஷெஹான் லக்ஷித்த வழிநடத்தவுள்ளதுடன், ரெஹான் மதுஷங்க பெர்னாண்டோ உதவித் தலைவராக செயற்படவுள்ளார்.

அத்துடன், இம்முறை போட்டித் தொடரில் ஏ குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி, முதல் போட்டியில் அவுஸ்திரேலியாவை இன்று எதிர்த்தாடவுள்ளது.

இந்த நிலையில், வரவேற்பு நாடான மியன்மாரை எதிர்வரும் நாளை ஞாயிற்றுக்கிழமை சந்திக்கவுள்ள இலங்கை அணி, வரும் 5ஆம் திகதி ஹொங்கொங் அணியை எதிர்கொள்ளும்.

அதனைத்தொடர்ந்து இரண்டாம் சுற்று, நிரல்படுத்தும் சுற்றுப் போட்டிகள் மற்றும் சம்பியன் அணியைத் தீர்மானிக்கின்ற போட்டிகள் எதிர்வரும் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற அங்குரார்ப்பண ஆசிய கனிஷ்ட கரப்பந்தாட்டத் தொடரில் இலங்கை அணி பங்கேற்கவில்லை. இதனையடுத்து 2017ஆம் ஆண்டு முதல்தடவையாகப் பங்கேற்ற இலங்கை அணி, 11 அணிகளில் 10ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.

இந்த நிலையில், இலங்கை கனிஷ்ட வலைப்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளராக சன்ன ஜயசேகரவும், உதவிப் பயிற்றுவிப்பாளராக சமிந்த குமார ஜயரத்னவும், உடற்கூற்று மருத்துவராக நிஷான் இந்திக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இலங்கை கனிஷ்ட கரப்பந்தாட்ட அணியினர் மியன்மாருக்கு புறப்பட்டுச் செல்வதற்கு முன்னர் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, செயலாளர் ஏ.எஸ் நாலக்க ஆகியோர் வீரர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

இதேவேளை, கடந்த சில வாரங்களுக்கு முன் வியட்நாமில் நடைபெற்ற பெண்களுக்கான ஆசிய கனிஷ்ட கரப்பந்தாட்டத் தொடரில் பங்கேற்ற இலங்கை அணி, அனைத்து போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி 13ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கரப்பந்தாட்ட அணி விபரம்:-

ஷெஹான் லக்ஷித்த பண்டார (தலைவர்), ரெஹான் மதுஷங்க பெர்னாண்டோ (உதவித் தலைவர்), ஷெஹான் மதுஷங்க பெர்னாண்டோ, சேனக டில்ஷான் ஜயரத்ன, அச்சிர சேனாநாயக்க, அவிஷ்க கெளஷல்ய, வினோத் மதுரங்க பீரிஸ், சமத் டில்ஷான், மதுஷங்க திஸாநாயக்க, நுவன் தாரக்க, கவிந்து பபசர சந்ரசிறி, அஷேன் தனுஷ்க பெர்னாண்டோ.

Sat, 08/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை