ரி10 கிரிக்கெட் தொடரில் சென்றலைட்ஸ் அணி சம்பியன்

யாழ்ப்பாணம் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு யாழில் முதல் முறையாக நடத்தப்பட்ட ரி10 கிரிக்கெட் தொடரின் சம்பியன் கிண்ணத்தை சென்றலைட்ஸ் அணியினர் சம்பியன் பட்டத்தை கைப்பற்றிக் கொண்டனர்.

தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் அண்டையில் யாழ். இந்தக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன.

இதில் முதலாவது அரையிறுதி போட்டியில் கொக்குவில் மத்தி அணியினை வெற்றிகொண்ட சென்றலைட்ஸ் அணியும், மற்றைய அரையிறுதிப் போட்டியில் ஜொலி ஸ்டார்ஸ் அணியினை வெற்றிகொண்ட ஏபி அணியும் இறுதி போட்டியில் மோதின.

இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய சென்றலைட்ஸ் அணிக்கு கௌதமன், ஜெனோஷன் இணை சிறப்பானதொரு ஆரம்பத்தினை வழங்கினர். ஜெனோஷன் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதும், தொடர்ந்து களத்திலிருந்த கௌதமன் 5 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 34 ஓட்டங்களினை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த வீரர்கள் அனைவரையும் ஏபி அணியினர் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழக்க வைத்தனர். இருப்பினும் உதிரிகளாக 31 ஓட்டங்கள் கிடைக்கப்பெற, 10 ஓவர்கள் முடிவில், சென்றலைட்ஸ் அணியினர் 97 ஓட்டங்களினை பெற்றுகொண்டனர்.

பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட பார்த்தீபன் 17 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுகளை கைக்பற்றினார்.

பின்னர் தமது இன்னிங்ஸை ஆரம்பித்த ஏபி அணியினரின் விக்கெட்டுக்கள் ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் இழக்கப்பட்ட போதும், மத்திய வரிசையில் கஜீபராஜின் அடுத்தடுத்த 2 ஆறு ஓட்டங்கள் மற்றும் லிங்கநாதனின் அதிரடி துடுப்பாட்டம் கைகொடுக்க ஏபி அணிக்கு வெற்றி இலக்கினை எட்டுவதற்கான வாய்ப்பு இருந்தது.எனினும் இறுதி ஒவேரில் ஏபி அணிக்கு வெற்றிக்கான 15 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில்,

முதலாவது பந்தில் 6 ஓட்டங்கள் உட்பட 8 ஔட்டங்களே பெறப்பட்ட நிலையில், 6 ஓட்டங்களால் வெற்றி பெற்ற சென்றலைட்ஸ் அணியினர் யாழ் மாவட்டத்தின் முதலாவது ரி10 தொடரின் சம்பியன்களாக முடிசூடிக்கொண்டனர்.

 

(நல்லூர் விசேட நிருபர்)

Tue, 08/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை