ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி, பிரதமர் வேட்பாளர் மஹிந்த இதனை ஏற்றால் மாத்திரமே கூட்டணி சாத்தியம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பொதுஜன பெரமுனவிடம் அடகுவைத்து கூட்டணி பேரம் பேச முடியாது. சு.கவின் தனித்துவத்தை விட்டுக்கொடுக்க நாம் தயாராகவில்லை. தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராகவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டால் மாத்திரமே சு.கவும் பொதுஜன பெரமுனவும் இணைந்து கூட்டணியை அமைக்க முடியுமென்று சு.கவின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சு.க.யின் கிளை காரியாலயமொன்றை தெஹிவளையில் பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

கூட்டணி அமைக்க பேரம் பேசுவதன் மூலம் எமது தனித்துவத்தை விட்டுக்கொடுத்து அடிமைபோன்று ஆதரவு வழங்க ஒருபோதும் நாங்கள் தயாரில்லை.

52 நாள் அரசாங்க மாற்றத்தின் போது மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராகவும், மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினருக்கு ஏற்க முடியும் என்றால் ஏன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் இதே மாற்றத்தைச் செய்ய முடியாது.

இந்த மாற்றத்துக்குத் தயார் என்றால், நாம் அனைவரும் துணிந்து வேலைசெய்து வெற்றி பெற தயாராக உள்ளோம். ராஜபக்ஷக்கள் வேண்டாம் என்றுதான் 2015 இல் மக்கள் வாக்களித்தனர். இதே தவறை மீண்டும் செய்யப் போகிறோமா?.

மிகவும் சிறிய பிரச்சினைதான் உள்ளது. தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராகவும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டால் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்றார்.

Mon, 07/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை