நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்ப்பதா? ஆதரிப்பதா?

கல்முனை விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டை பொறுத்தே த.தே.கூ முடிவு

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் குறித்த அரசின் நிலைப்பாட்டை பொறுத்தே நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதா எதிர்ப்பதா என தீர்மானிக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள சொறிக்கல்முனை

ஹோலி குறோஸ் வித்தியாலய வீதியை தார் வீதியாக புனரமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாககலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை நாவிதன்வெளி பிரதேச சபையின் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் அந்தோனி சுதர்சன் தலைமையில் இடம்பெற்றது.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இந்த நாட்டின் அரசுக்கெதிராக கொண்டுவரப்படுகின்ற நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவழிப்பதா?எதிர்ப்பதா? என்ற பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பாகிய நாங்கள் பலதரப்பட்ட அழுத்தங்களை கொடுக்கவி ருக்கின்றோம். விஷேடமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுகின்ற விடயத்தில் காத்திரமான அழுத்தத்தை இந்த அரசுக்கு கொடுத்து நம்பிக்கையில்லா பிரேரணையில் ஆதரவு வழங்குவதா? இல்லையா? என கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சார்ந்த விடயமே தீர்மானிக்கின்ற சக்தியாக இருக்கின்றது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சார்ந்த பிரச்சினைகளை தாண்டி வடக்கு கிழக்கு தமிழர்களின் பிரச்சினைகளையும் எடுத்துக்கூறி அவற்றையும் நடைமுறைப்படுத்தாமல் இந்த அரசு தவிர்க்குமானால் அரசுக்கெதிராக சில நடவடிக்கைகளை எடுக்க நேரிடும்.

விஷேடமாக நாங்கள் உரிமை சார்ந்த விடயங்களை முன்னெடுக்கின்ற அதே வேளை, அபிவிருத்தி சார்ந்த விடயங்களையும் சமகாலத்தில் மேற்கொண்டுவருகிறோம். நாங்கள் ஒருபோதும் மாற்றினத்திற்கோ மாற்று சமூகத்திற்கோ ஆண்டான் அடிமையாக இருக்க முடியாது என்றார்.

 

பாண்டிருப்பு தினகரன் நிருபர்

 

Mon, 07/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை