அரசியல்வாதிகள் கதையளக்கிறார்களே தவிர காரியம் ஆகவில்லை

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் விடயத்தில் அரசாங்கம் எமக்கு நியாயமான தீர்வைத்தர வேண்டும்.நாம் எவ்வித அரசியல் பின்புலமோ வேறு அழுத்தங்கள் இல்லாமலே உண்ணாவிரதத்தில் குதித்தோம். அது முடிவுற்று 15 தினங்களாகின்றன. அரசியல்வாதிகள் அவரவர் வாசிக்கேற்ப கதையளக்கிறார்கள்.

இவ்வாறு கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதமிருந்த கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார்.

கடந்த 17ஆம் திகதி தொடங்கிய கல்முனையில் சாகும் வரையிலான உண்ணாவிரதம் வண.ஞானசாரதேரரின் உறுதிமொழியையடுத்து கடந்த 22 ஆம் திகதி கைவிடப்பட்டது.

அதன்பின்பு 15 நாட்கள் கழிந்த நிலையில் முதன் முதலாக உண்ணாவிரதமிருந்த ராஜன் கருத்துக்களை வெளியிட்டார்.

அவருடன் ஏனைய உண்ணாவிரதிகளான வண்.ரண்முத்துகல சங்கரத்னதேரர், சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவக் குருக்கள் ஆகியோரும் உடனிருந்தனர்.

அங்கு ராஜன் மேலும் கருத்துரைக்கையில்:

கடந்த நான்கரை வருடங்களாக பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கிறோம் என்று கூறிகாலத்தைக் கடத்திவிட்டு இன்று இன்னும் 3 மாதங்கள் காத்திருங்கள் தீர்வு தருகிறோம் என்கிறார்கள். அப்போது ஜனாதிபதித் தேர்தல் அல்லது பாராளுமன்றத் தேர்தல் வந்துவிடும். எனவே தற்போது ஒன்றும் செய்ய முடியாது. தேர்தல் முடியப்பார்ப்போம் என்பார்கள்.

நாங்கள் யாருடைய கதையைக் கேட்டோ யாருடைய பின்புலத்திலோ எமது உண்ணாவிரதத்தைத் தொடங்கவில்லை. நான் த.தே.கூட்டமைப்பைச் சேர்ந்தவன் என்ற அடிப்படையில் மாத்திரம் எமது மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனிடம் சொன்னேன். அவர் அப்போது வெளிநாட்டிலிருந்தார்.மற்றது கட்சித் தலைவர் அடைக்கலநாதனிடம் தொடர்பு கொண்டேன்; முடியவில்லை.

ஆக நாம் எந்த அரசியல்வாதிகளையோ மதவாதிகளையோ உண்ணாவிரத திடலுக்கு அழைக்கவில்லை. மக்கள் அமோக ஆதரவுதந்தார்கள்.கல்முனை தமிழ் மக்கள் மன்றம் கூடவே இருந்தது. நாமும் எமது கோரிக்கை நிறைவேற வேண்டும் என்பதற்காக மக்களுக்காக வைராக்கியத்துடன் இருந்தோம்.

வடக்கு தொடக்கம் நாடெங்கிலுமிருந்து தமிழ்ப்பற்றுள்ள அரசியலாளர்களும் ஏனையோரும் வந்தார்கள். அவர்களது கருத்துக்களை ஊடகங்களுக்கு வெளியிட்டார்கள்.அது அவரவர் சுதந்திரம்.அதற்கும் எமக்கும் எவ்வித தொடர்புமில்லை

வருகைதந்து எம்மை உற்சாகப்படுத்திய அனைத்து பிரமுகர்களுக்கும் எமது நன்றிகள். சிலருக்கு அசௌகரியம் ஏற்பட்டதற்காக கவலையடைகின்றோம். அதற்கும் எமக்கும் துளிகூட தொடர்பில்லை.

ஞானசார தேரர் வந்தது பற்றி விமர்சனம் கிளம்பியது. உண்மையில் எமது அணியில் ஒரு பௌத்ததேரரும் உண்ணாவிரதமிருந்தார். அவர் தற்சமயம் கல்முனையில் வாழ்பவர். அவர் மட்டுமல்ல மேலும் பல சிங்களக் குடும்பங்கள் வாழ்கின்றன. அந்த அடிப்படையில் கல்முனையின் ஓரங்கம் என்ற அடிப்படையில் அவர் சார்ந்த மதத்தலைவர்கள் தினமும் வருகை தந்தனர். அவர்களுக்கும் கல்முனை நகர் சொந்தம். அது அவர்களது உரிமை.அவர்கள் 3ஆம் தரப்பல்ல. பூர்வீகமாக பார்த்தால் தமிழரும் சிங்களவருமே முதலாந்தரப்பு.

எங்கோ பிறந்து வேறுமொழி பேசும் இங்குவாழும் பௌத்ததேரர் இங்கு உண்ணாவிதமிருக்கிறார். ஆனால் பிரதேச செயலகம் தரமுயர்த்தல் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ்மக்களிடம் வாக்குகளைப்பெற்று மாநகரசபை உறுப்பினர்களாக தெரிவானோர் உண்ணாவிரதமிருப்பதை விட்டுவிட்டு வெறும் பார்வையாளர்களாக இருந்து விட்டு முன்னுக்கு பின் முரணாக பத்திரிகை அறிக்கை விடுகிறார்கள். ஞானசாரதேரர் எதற்காக இவர்களைச் சந்திக்க வேண்டும்? அவர் இவர்களைப் பார்க்கவா வந்தார்? அவர் உண்ணாவிரதிகளைப் பார்க்கவே வந்தார்.

இன்று பாண்டிருப்பை விற்பதற்கு கடையை மாற்றானிடம் கொடுத்து பிள்ளையார் சுழி போட்டுள்ளார்கள். தட்டிக் கேட்கப் போனவர்களை பொலிசில் மாட்டுகிறார்கள். இவர்களா தமிழ்ப்பற்றாளர்கள்?

எம்மவர் வாய் வீச்சில் மட்டும் விண்ணனாக இருந்து வாழாவிருக்கிறார்கள் என்பதற்காக அவர்களும் வாழாவிருக்கலாமா? அவர்தம் தலைவர் ஞானசாரதேரர் துணிவோடு ஒரு மாதகால அவகாசம் தந்தார். அதற்கும் செவிசாய்க்க வேண்டும். அதற்காகப் பொறுத்திருக்கிறோம்.

மனசாட்சியுள்ள அரசியல்வாதிகளும் வந்திருந்தார்கள். அவர்களை நாம் மறக்கவில்லை.எமது தமிழ்த் தலைவர்கள் இந்தப் பக்கமே வரவில்லை. 3 ஆம் நாள் மாநாடு நடந்தது. எமது கல்முனைப் பிரச்சினை தொடர்பாக ஒரு தீர்மானம் கூட இல்லை. கவலையடைந்தோம்.எனவே இன்னமும் இவர்களை நம்பி ஏமாறச் சொல்கிறீர்களா?

உதட்டளவில் நல்லிணக்கம் பேசுகிறார்கள். உண்ணாவிரதத்திற்குப் பிறகு கூட கல்முனை நகருக்குள் போடப்பட்ட கார்ப்பட் வீதிகள் தமிழ்ப் பிரதேசம் வந்தவுடன் நிறுத்தப்பட்டுள்ளது. கல்முனை மாநகரசபை மேயர் றக்கீப், சபை அமர்வில் பகிரங்கமாக, எமது அமைச்சர்கள் தரும் நிதி எமக்கு, நீங்கள் தேவையென்றால் உங்கள் தமிழ் எம்.பிக்களிடம் கேட்டு எடுத்துவாருங்கள் என்று பேசுவார்.

சகல இனத்திற்குமான கல்முனை மாநகர சபைக்கான ஒரு நகரபிதா ஓரினத்திற்கான சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கிறார் என்றால் அவரை நகரபிதாவாக ஏனையவர்கள் ஏற்கலாமா?

இவர்களோடு பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வுகாண்பது சாத்தியமா? முடியுமா? குழுபோட்டு பேச்சுவார்த்தை என்ற போர்வையில் காலங் கடத்தி வந்தது.கடந்த கால வரலாற்றை நாம் மறக்கவில்லை.நாம் எமக்கான போதுமான ஆதாரங்களை பட விளக்கத்தடன் சமர்ப்பித்துள்ளோம். எனவே அரசாங்கம் உரிய நியாயமான தீர்வைத்தரவேண்டும்.

காரைதீவு குறூப் நிருபர்

Mon, 07/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை