பிரதம நீதியரசர், மேல் நீதிமன்ற நீதிபதிகளை அழைத்து ஐ.நா. பிரதிநிதிக்கு விளக்குவதை நிறுத்த வேண்டும்

வெளிவிவகார அமைச்சுக்கு சபாநாயகர் அறிவிப்பு

நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்குகள் தொடர்பில் பிரதம நீதியரசரையும் மேல் நீதிமன்ற நீதிபதிகளையும் அழைத்து ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிக்கு தெளிவுபடுத்தும் செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் விடுத்த கோரிக்கையையடுத்தே சபாநாயகர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

பாராளுமன்றம் நேற்று பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் கூடியது.தினப்பணிகளை தொடர்ந்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன மேற்படி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார்.அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ,விமல் வீரவங்ச,விஜேதாஸ ராஜபக்ஷஷ,சந்திம வீரக்கொடி ஆகியோரும் கேள்வி எழுப்பினர்.

தினேஷ் குணவர்ன எம்.பி கூறியதாவது, அரசியலமைப்பின் பிரகாரம், நீதித்துறையில் தலையீடு செய்ய முடியாது.அது தவறு. ஆனால் வெளிவிவகார அமைச்சின் பதில் செயலாளர் நீதிமன்ற செயற்பாடுகளில் தலையீடு செய்யும் வகையில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். வெளிநாட்டு பிரதிநிதி ஒருவருக்கு விசாரணையிலுள்ள வழக்கு குறித்து தெளிவுபடுத்துமாறு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.பிரதம நீதியரசரையும் மேல் நீதிமன்ற நீதிபதிகளையும் இவ்வாறு அழைப்பது பாரிய தவறாகும் என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பேசுகையில்,ரொஷான் சானக்க கொலை வழக்கு,வெலிக்கடை சிறை விவகார வழக்கு,ரத்துபஸ்வல உட்பட 4 வழக்குகள் தொடர்பில் தெளிவுபடுத்துமாறு பிரதம நீதியரசர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகளிடம் கேள்வி எழுப்ப இடமளித்திருப்பது நீதித்துறை சுயாதீனத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றார்.

சந்திம வீரக்கொடி எம்.பி,

நீதிச்சேவை ஆணைக்குழு செயலாளருக்கும் இது தொடர்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நீதித்துறையில் தலையீடு செய்ய இடமளிக்க முடியாது என்றார்.

விஜேதாஸ ராஜபக்ஷ எம்.பி,

விசாரிக்கப்படும் வழக்கு தொடர்பில் ஐ.நா பிரதிநிதிக்கு நீதிபதிகளிடம் கேள்வி கேட்க இடமளிப்பது அரசியலமைப்புக்கு முரணானது.இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சரையும் செயலாளரையும் விசாரிக்க வேண்டும்.நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்.தனக்கு இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி நீதிபதிகளுக்கு அமைச்சின் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.

இவரை பாராளுமன்றத்திற்கு அழைத்து விசாரிக்க வேண்டும் என்றார். (பா)

ஷம்ஸ் பாஹிம்.மகேஸ்வரன் பிரசாத்

Wed, 07/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை